2025 ஜூலை 19, சனிக்கிழமை

'இந்திய மீனவர்களின் வருகை வருட இறுதியில் முற்றாக நிறுத்தப்படும்'

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுப்பதாக தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மன்னாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகை தந்த கடற்தொழில் அமைச்சர், மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்தரையாடல், மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் பலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் முன்வர வேண்டும்.

குறிப்பாக டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும் அவ்வாறு  பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், இந்திய மீனவர்கள் இலுவைப்படகுகள் மூலம் எமது கடற்பிராந்தியங்களுக்குள் வருகை தந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர். இது எமது நாட்டுப் பிரச்சினை என நான் கருதுகின்றேன்.

அந்தவகையில், இலங்கை கடற்பிராந்தியத்துக்குள் நுழைகின்ற இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துமாறு கடற்படை அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X