2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'இனம் சிதைவடைந்தாலும் பண்பாடு அழியக்கூடாது'

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன்

“ஒரு இனம் சிதைவடைந்தாலும் அவ்வினத்தின் பண்பாட்டை அழிய விடக்கூடாது” என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், யாழ். மாவட்டச் செயலகம், யாழ். மாவட்ட கலை, கலாசார பேரவை ஆகியன இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா – 2016, சாவகச்சேரி நகராட்சி பொன்விழா மண்டபத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “இன்றைய காலங்களில் பாராம்பரிய கலைகள் வீழ்ச்சியடைந்து செல்கின்றன. அக்கலைகளில் பங்கு பெற்றும் கலைஞர்களின் அளவும் வீழ்ச்சியடைந்து வருகிறது. சிதைவடைந்து போகும் பண்பாட்டினை மீளவும் கட்டியெழுப்பவும், இளைஞர்களினை இந்தக்கலைகளில் ஈடுபடுத்தவும், சமூக விரோதச்செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்தும் இந்தக்கலாசாரப் பேரவை பணியாற்றும்” என்றார்.

விளைவேலி ஆதீன பிரதம குரு ஜெகதீஸ்வரக்குருக்கள், மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய அருட்தந்தை எக்ஸ்.டபிள்யு.ஜேம்ஸ், சாவகச்சேரி ஜூம்மா பள்ளிவாசல் முகைதீன் மௌலவி எம்.எச்.எம்.ஹஸ்சான், நாவற்குழி விகாராதிபதி வண. ரத்னசிறி தேரர் ஆகியோர் ஆசியுரையை வழங்கினர்.

நாட்டார் இசை, கிராமிய நடனம், நாடகம் கைதடி வாழ் கலைஞர்களின் கூத்து என்பன இந்நிகழ்வில் இடம்பெற்றதுடன் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன், “யாழ் முத்து” என்னும் மலர் வெளியீடு மற்றும் மூத்த கலைஞர் கௌரவிப்பு என்பனவும் இடம்பெற்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X