2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதி வேண்டும்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கான நீதி வேண்டும் என முத்தெட்டுவேகம செயலணி தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமான அமர்வுகள் வியாழக்கிழமை(04) வரை போர்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்த முத்தெட்டுவேகம செயலணி முல்லைத்தீவு மக்கள் ஒருபோதும் இழப்பீடுகளை எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழுவினர் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் மாவட்ட மட்டத்திலான அமர்வுகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைய, இந்த செயலணியின் பிராந்திய குழுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த எட்டு நாட்களாக அமர்வுகளை நடத்தியது.

கரைதுரைபற்று, துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்குஇ புதுக்குடியிருப்பு மற்றும் மணலாறு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வுகளின்போது முன்னிலையாகிய மக்கள் போரின்போதும் அதற்கு பின்னரும் தமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக முல்லைத்தீவு மாவட்ட செயலணி உறுப்பினர்கள்  தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா இராணுவத்தினரால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டதாக கூறி விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தாம் நடத்திய அமர்வுகளில் கலந்துகொண்ட பல முன்னாள் போராளிகள் முறையிட்டதாக செயலணியினர் கூறுகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் நியாயத்தன்மை புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதையும் அவை குறித்து சுதந்திரமாக பகிரப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டும் எனவும் இறுதிக்கட்ட போரினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வலியுறுத்தி இருப்பதாகவும் மனோரிமுத்தெட்டுவேகம செயலணியின் உபகுழு தெரிவித்தது.

போருக்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் படையினருக்காகவும் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக காணி அபகரிக்கப்படுவது தொடர்பில் தமது அமர்வுகளில் மக்கள் முறையிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

வடபகுதியில் அமர்வுகளை நடத்திவரும் முத்தெட்டுவேகம செயலணியில் முன்னிலையாகிய மக்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் நடந்துகொள்வதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

இந்த விடயம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட உபகுழுவின் பிரதிநிதிகளிடம் வினவியபோது இதுவரை அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை என கூறிய அவர்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தனர்.

கடந்த ஜுலை மாதம் 26 ஆம் திகதி முதல் வியாழக்கிழமை(06) வரை முல்லைத்தீவில் பல இடங்களில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக அமர்வுகளை நடத்திய தமக்கு போரின்போதும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற கொடூரங்கள் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்ட தமக்கே ஆற்றுப்படுத்தல் தேவைப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலணியின் உப குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X