2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

'எமது விடுதலைப் போராட்டத்தின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்களால் தான், எமது பிரச்சினையானது, சர்வதேச சமூகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. எனவே, எமது உரிமைக்காக போராடி மடிந்தவர்களின் நினைவு நாளினை, ஆத்மார்த்த ரீதியாக அனுஸ்டிப்போம்.

எதிர்வரும் 27ஆம் திகதிக்கு அமைந்த மாவீரர் நாளை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், காலை 9.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம். அந்நேரத்தில், மாவீரர் குடும்பத்தவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோருகிறேன்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி தாருங்கள் என, நாம் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை பெரும்பான்மையின மக்களுக்கு உண்டு எனில், எமது உரிமைக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை, தமிழ் மக்களுக்கும் உண்டு' என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X