2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'என்னை செம்மறி என்று நினைத்தீர்களா?': சி.வி.கே. காட்டம்

George   / 2016 மே 10 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபை அமர்வு விடயங்களை பதிவு செய்யும் ஹன்சாட்டில் செம்மறி என்ற வார்த்தை பதிவாகிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் இடம்பெற்றது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்துக்கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா,

'சபை அமர்வு ஒழுங்கு முறையில் கொண்டு செல்லப்படவில்லை. நிகழ்ச்சி நிரலின்படி நடக்காமல் விவாதம் மட்டும் நடக்கின்றது. மேலும், வடமாகாண கல்வி சீரழிந்தமைக்கு, வடமாகாண அமைச்சின் நிர்வாகம் பொறுப்பேற்கவேண்டும். முன்னர் போல எப்போதும், மத்திய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து எதையாவது செய்ய வேண்டும்' என்றார்.

'மேலும், அவையில் எதிர்க்கட்சியினர் கருத்துக்கூற உரிமம் தரப்படுவதில்லை. மற்றவர்கள் பேச அனுமதியளிக்கும் அவைத்தலைவர், நான் பேச அனுமதிப்பில்லை' என்றார்.

இதனையடுத்து, சபையில் வழமை போன்று உறுப்பினர்களிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. சபை அமைதியில்லாமல் இருப்பதை அவதானித்த அவைத்தலைவர், கோபமடைந்து, 'என்னை செம்மறி என்று நினைக்கின்றீர்களா?, ஜனநாயகம் என்று உங்களைப் பேசவிட்டால் அடிபடுகின்றீர்கள், இங்க அடிபட்டுவிட்டு, வெளியில் ரகசியமான முறையில் சந்திக்கின்றீர்கள். நீங்கள் எப்போது? எங்கே? சந்திக்கின்றீர்கள் என எனக்குத் தெரியும்' என காட்டமாக கூறினார்.

இதன்போது எழுந்த ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன், 'கௌரவமான சபையில் உங்களை நீங்கள் செம்மறி என்று கூறுகின்றீர்கள். தயவு செய்து இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள்' என்றார்.

எனினும், அதனைக் கருத்திற்கொள்ளாத வடமாகாண சபை அவைத்தலைவர், சபையை தேநீர் இடைவேளைக்காக ஒத்திவைத்தார். இதன்மூலம் செம்மறி என்னும் விடயம் ஹன்சாட்டில் பதிவாகியது. 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X