2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதன் பின்னணி என்ன?'

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பொலிஸாரின் தீவிரமான  நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், குடாநாட்டின் குற்றச்செயல்கள் அதிகரித்து இருப்பதன் பின்னணி என்ன என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். இவ்வாறு, குடாநாட்டைப் பதற்றமான நிலையில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வினவினார்.நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'யாழ். குடாநாட்டில் போதைவஸ்து பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் போன்ற சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. காவல் துறையினரின் பல்வேறு நடவடிக்கைகள், இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இவ்வாறான சம்பவங்கள் குறைவின்றி அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பில், ஏற்கெனவே, நான், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு, மேற்படி குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரும், யாழ். குடாநாட்டில் அவ்வாறான செயற்பாடுகள் குறைவின்றித் தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், நான் உட்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நீதிபதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், பல்வேறு அழுத்தங்களை முன்வைத்துவந்த நிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ரொக் டீம்' என்ற குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இச்சம்பவங்களுடன், வேறு குழுக்கள் அல்லது நபர்களுக்கும்; தொடர்புகள் இருக்குமாயின், அவர்களையும் உடனடியாக கைது செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அரசாங்கம் அறியத்தர வேண்டும்' என்று அவர் மேலும் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X