2025 ஜூலை 19, சனிக்கிழமை

'குடிநீர்ப் பிரச்சினையை கதைப்பதற்கு இரண்டு நாட்கள் தேவை'

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சுன்னாகம், கிளிநொச்சி, பூநகரி, மன்னார் மற்றும் தீவகம் ஆகிய பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் கதைப்பதற்கு தனியாக 2 நாட்கள், வட மாகாண சபை அமர்வு நடத்த வேண்டும் என வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, சுன்னாகமம் பகுதியை அண்மித்த கிராமங்களில் உள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் நிவாரணம் வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2015ஆம் ஆண்டு வழங்கிய நிதி விபரம், அதன் பின்னர் நிதி நிறுத்தப்பட்டமை தொடர்பில் விபரங்கள் வேண்டும் என சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கோரினார்.

இதற்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதிலளிக்கையில்,

'அனர்த்த முகாமைத்துவப் அமைச்சு நிதி நிறுத்தியமை தொடர்பில் எமக்குத் தெரியாது. அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை. 115 இடங்களில் எமது அமைச்சால் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு, தொடர்ந்தும் குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

வேள்ட் விசன் அனுசரணையுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வைத்த 65 தண்ணீர் தாங்கிகளுக்கான குடிநீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 30 தாங்கிகளுக்கான குடிநீரை நாங்கள் வழங்கி வருகின்றோம். மிகுதி 35க்கும் குடிநீர் வழங்குவோம்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, குடிநீரை நிறுத்தியதுக்கும் எமது வடமாகாண சபை நிபுணர் குழு சமர்பித்த  அறிக்கை காரணம் இல்லை. அவர்கள் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அறிக்கையின் படியே குடிநீரை நிறுத்தியுள்ளனர்' என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை தொடர்பில் தனியாக ஒருநாள் அமர்வு நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, சுன்னாகம் மாத்திரமல்ல கிளிநொச்சி, பூநகரி, மன்னார் மற்றும் தீவகம் ஆகிய பிரதேசங்களின் குடிநீர்ப்; பிரச்சினை தொடர்பாகவும் கதைக்க வேண்டும். இதற்கென தனியாக இரண்டு நாட்கள் அமர்வு நடத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X