2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'காணி, நிலங்கள் இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் காணி, நிலங்களில் படையினருக்கு மிகத் தேவையான நிலங்கள், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு தேவையான நிலங்கள் போக,  பொது மக்களுக்குச் சொந்தமான எஞ்சிய நிலங்களை அவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தேசிய பொங்கல் நிகழ்வில் உரையாற்றும் போது அறிவித்திருக்கும் நிலையில், மேற்குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கென இனங்காணப்படும் காணி, நிலங்களில் மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார காணி, நிலங்கள் உள்ளடக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த பல வருடங்களாக பாரிய இன்னல்களுக்கு மத்தியில் நலன்புரி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மீள்குடியேற்றங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டியுள்ளன.

வலிகாமம் வடக்கிலுள்ள பெரும்பாலான நிலங்கள் விவசாய செய்கைக்கு மிகவும் செழிப்பான வளங்களைக் கொண்ட நிலங்கள். இந்நிலங்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தக்கூடிய இதேவேளை, எமது தேசிய விவசாய உற்பத்தியில் அதிக பங்கினை வழங்கக் கூடியன.

அதேபோன்று, மயிலிட்டி கடற்றொழில் துறைமுகமானது யாழ். மாவட்ட கடற்றொழிலுக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த வகையில் எமது மக்களின் வாழ்விடப் பகுதிகளும் வாழ்வாதாரங்களை கேந்திரமாகக் கொண்ட பகுதிகளுமாக வலிகாமம் வடக்கில் இன்னும் பல காணி, நிலங்கள் விடுவிக்கப்படாதுள்ளன.

இந்த நிலையில் இராணுவத்துக் விமான நிலையத்துக்கு துறைமுகத்துக்கென காணி, நிலங்கள் இனங்காணப்படும்போது, எமது மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார காணி, நிலங்கள் அவற்றுள் உள்ளடக்கப்படாத வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தான் வலியுறுத்தப் போவதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X