2025 ஜூலை 19, சனிக்கிழமை

'காணாமற்போனது 1997, விசாரணை நடத்தியது 2015இல்'

Niroshini   / 2016 ஜனவரி 13 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

எனது மகன் 1997ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் கடந்த 2015ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டனர். காணாமற்போனமை உண்மையா என அயலவர்களையும் விசாரித்துச் சென்றனர் என்று  காணாமற்போன கணேஷ் கருணாரட்ணம் என்பவரின் தாய் ரேவதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை  நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆலைக்கு, தனது நண்பனுடன் சென்ற எனது மகனும் நண்பனும் (கடத்தப்படும் போது வயது 19) மாவடி இராணுவ முகாம் இராணுவத்தினரால் கடத்தப்பட்டனர். இவ்விருவரது சைக்கிள்களையும் இராணுவ முகாம் அருகில் இருந்து மீட்டோம்.

இது தொடர்பில் முகாமுக்குச் சென்று கேட்டபோது எங்களை துரத்திவிட்டனர். 3 நாட்கள் கழித்துச் சென்ற போது, ரெயின் கோர்ட் போட்டபடி மகன் முழங்காலில் இருத்தப்பட்டிருந்தார். மகன் என்னைப் பார்த்து அம்மா என்று கத்தியபோது மகனை அடித்து இழுத்துச் சென்றனர். அந்த முகாமின் பொறுப்பதிகாரியாக சமரசிங்க என்பவர் இருந்தார்.

தொடர்ந்து, 512ஆவது படைப்பிரிவினருக்கும் அப்போதிருந்த யாழ்.மாவட்டச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கிராமஅலுவலருடன் அங்கு சென்று எனது மகனின் புகைப்படத்தைக் காட்டி கேட்டேன். அதற்கு 15 நாட்களுக்குள் விடுவதாகச் சொன்னார்கள். மகனைக் காட்டுமாறு கேட்டபோது, நோய் காரணமாக மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். ஆனால் சொன்னபடி மகனை அவர்கள் விடுதலை செய்யவில்லை.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு, 2006ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் வயோதிபர் ஒருவர் ஐ.சி.ஆர்.சிக்கு வாக்குமூலமளித்தார். அதில் கடைக்குச் சென்ற மற்றும் அரைக்கும் ஆலைக்குச் சென்ற இளைஞர்களையும் என்னுடன் அடைத்து வைத்திருந்தனர் எனக்கூறியிருந்தார். இதன்மூலம் எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என்பது தெரியவந்தது என்றார்.

' 2015ஆம் ஆண்டு ஜோசப் முகாமுக்குச் சென்று மகனைப் பற்றி கேட்டேன். அங்கு உங்கள் மகன்இல்லையெனக் கூறினார். நான் திரும்பி வீட்டுக்கு வந்து இருந்தபோது, வீட்டுக்கு வந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் மகன் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை செய்தனர்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X