2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'குளிரூட்டிய அறைக்குள் நல்லிணக்கம் வராது'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'பொறிமுறைகளை குளிரூட்டிய அறைகளுக்குள் மட்டுப்படுத்தினால், நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது. அவை மக்கள்மயப்பட்டதாக கிராமிய மட்டத்தில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுகைளைக்கூட எழுத்து வடிவில் மாத்திரமே அரசாங்கம் வைத்திருப்பதாகவும், அவை செயல் வடிவத்தில் இல்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற, நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வின் போதே, மேற்படி அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்தது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவ்வமைப்பு கூறியதாவது,

'முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கியிருந்த போதிலும், அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழியினை, அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. இந்த முன்னாள் போராளிகள், பொலிஸ் அத்தாட்சிப் பத்திரமொன்றைப் பெறக்கூட முடியாத சூழ்நிலையே தற்போது நிலவுகிறது.

யுத்தத்தால் பாதிப்புகளுக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு, துவிச்சக்கரவண்டி போன்ற சாதனங்களை மட்டும் வழங்கினால், அவர்களின் பொருளாதராத்தை கட்டியெழுப்ப முடியாது. அவர்களின் அடிப்படைப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

வெளிநாடுகளில் அவற்றுக்கான பொறிமுறைகள் இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளை வெளிநாடுகளில் நடத்துகின்ற முறையே வேறுவிதமானது. இங்கு செயற்படுத்தும் பொறிமுறைகளை, குளிரூட்டிய அறைகளுக்குள் மட்டுப்படுத்தினால் இது போதுமானதாக இருக்காது. அவை, கிராமிய மட்டத்தில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

அரசுக்கான பரிந்துரைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரச நியமனங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பைப் பலப்படுத்திவிடுதல் போன்றவற்றைச் செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என்று அவர்கள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X