2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குழந்தைக்குத் தான் தந்தையில்லையென பெண்ணை ஏமாற்றிய இளைஞனுக்கு சிறை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சட்டரீதியாகத் திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்து குழந்தை ஒன்று பிறப்பதற்குக் காரணமான இளைஞனுக்கு, 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தினை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபரின் மரபணு, குழந்தையின் மரபணுவுடன் ஒத்துபோனநிலையில்; பிள்ளையின் பெயர் பதிவில் தந்தையின் பெயராக மேற்படி நபரின் பெயரை இட்டுப் பதிவு செய்வதற்குரிய ஒத்துழைப்பினை வழங்குமாறு நீதவான் இதன்போது பணித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுப் பகுதியினை சேர்ந்த யுவதியுடன் வரணி கரம்பை குறிச்சி பகுதியினைச் சேர்ந்த இளைஞன், தனியார் பஸ்ஸின்  சாரதியாக இருக்கும் போது நட்பாகப் பழகியுள்ளார். பழகிய நட்பு நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியதில் இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதன் காரணமாக குறித்த யுவதி கர்ப்பமடைந்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்யுமாறு யுவதி கேட்டபோது, மேற்படி நபர் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என ஏமாற்றி வந்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

பொலிஸாரினால் கைதான இளைஞன் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தை பிறந்த பின்னர் அக் குழந்தையின் இரத்தமாதிரியையும், இளைஞனின் இரத்த மாதிரிகளை நீதிமன்ற உத்தரவுக்கு அமையப் பெற்ற பொலிஸார், அதனை ஜின்ரெக் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர். கடந்த மாதம் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்ற இரத்தமாதிரிகளின் அறிக்கையில் பிறந்த குழந்தைக்குத் தந்தை, மேற்படி நபர் என்பது உறுதியானது.

வெள்ளிக்கிழமை (02) வழக்கின் தீர்ப்பு மன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போது, 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நீதவான் உத்தரவிட்டதுடன், பிறந்த குழந்தைக்கு சட்டரீதியான தந்தை மேற்படி நபர் என்பதையும் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X