2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தீர்வு கிட்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனி நபர் உரிமைகளை உறுதி செய்வதன் மூலமும், நல்லாட்சி நிறுவன மறுசீரமைப்பு மூலமும், சட்டத்தின் ஆட்சி மூலமும் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டாது. மாறாக தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அரசியலமைப்பின் மூலம் நிறுவன ரீதியாக அங்கீகரிப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்தது.

இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில், தங்கள் அமைப்பு சார்பாக கொடுக்கப்பட்ட மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கம் தீர்வாகாது. ஒற்றையாட்சி என்பது மத்திக்கே அதிகாரம் உண்டு. அது விரும்பினால் அதிகாரங்களை பகிர்ந்து மாகாண அலகுகளுக்கு கொடுக்க முடியும் என்ற தத்துவத்தின் பாற்பட்டது. ஒற்றையாட்சி அரசியலமைப்பில் தமிழருக்கு உரித்து அடிப்படையில் அதிகாரங்கள் இருக்க வாய்ப்பில்லை.

சமஷ்டி என்றோ ஒற்றையாட்சி என்றோ அரசியலமைப்பு தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்தத் தேவையில்லை என்று கூறுவது ஏமாற்றும் தன்மையானது. சிங்களத் தலைவர்கள் வேண்டுமென்றே சமஷ்டி தொடர்பிலான பயப்பிராந்தியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அதனைக் களைய முன் வர வேண்டும்.

படிப் படியாக தீர்வை அடைந்து கொள்ளலாம் எனக் கருதுவது உண்மையான மாற்றத்தை தள்ளிப் போடுவதாகும். படிப்படியான தீர்வு என்பது நிச்சயமாக ஒற்றையாட்சிக்குட்பட்டதாக இருக்க முடியாது.
நீதி, மற்றும் பொறுப்புக் கூறலுக்குமான செயன்முறைக்கும் அரசியல் தீர்வுக்கான செயன்முறைக்கும் நேரடி சம்பந்தம் உண்டு. எனவே தான் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்காக பொறுப்புக் கூறலை தமிழர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் நிராகரிக்கிறோம்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களின் பாதுகாப்பும் அவர்களின் தாயகத்தின் ஆள்புல ஒற்றுமையும் சம்பந்தப்பட்ட விடயம். ஆகவே அவ்விடயங்களில் விட்டுக் கொடுப்பு சாத்தியமில்லை.
வடக்கு - கிழக்கு இணைப்பு விடயத்திலும் விட்டுக் கொடுப்புக்கு வாய்ப்பில்லை. இணைந்த வடக்கு, கிழக்குக்குள் முஸ்லிம், சிங்கள மக்களின் உரிமைகள் குறிப்பாக முஸ்லிம்களின் சுயாட்சி கோரிக்கை உள்வாங்கப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X