2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘தமிழ்-முஸ்லிம்களை பிரிக்க முடியாது’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.லாபீர்

“இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள், தங்கள் தாய்மொழியாக, தமிழையே பேசுகின்றனர். சமயத்திலும் கலாசாரத்திலும் அவர்கள் வேறுபட்டிருந்ததாலும், மொழியினால் நீண்ட பாரம்பரியமாக ஒன்றுபட்டுள்ளார்கள். இவ்விரு இனங்களையும் எவராலும் பிரிக்க முடியாது” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

யாழ். மாவட்ட பிரஜைகள் குழுவினர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (10) சந்தித்து கலந்துரையாடினர்.  

இந்தச் சந்திப்பில், பிரஜைகள் குழுவின் தலைவர் கிஷோர் அன்டன், செயலாளர் கலாநிதி நா.தனேந்திரன், பொருளாளர் மீ.லாபீர், உறுப்பினர்களுடன், சர்வோதயத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சி.யுகேந்திரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் கூறியதாவது,  

“30 வருடகால யுத்தத்தினால், மக்கள் பல்வேறு இழப்புக்களை அனுபவித்துள்ளனர். காணாமல் போனவர்கள், காணி அபகரிப்பு, இறந்தவர்கள், சொத்து இழந்தவர்கள் என பல துன்பங்கள், மக்களிடையே காணப்பட்டது.  

இவ்வாறான நிலைமைகளை பேச முடியாத சூழ்நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசில் மக்கள் சுதந்திரமடைந்துள்ள நிலையில் மக்கள் விழிப்படைந்து பேசுகின்றனர்.  

மக்களின் பேச்சுக்கு அரசும் தமிழ் தலைவர்களும் தலைசாய்க்க வேண்டும். பிரஜைகள் குழுவும் ஏனைய சமூக குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து, மக்கள் சக்தியை வலுவடையச் செய்து, மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல் அவசியம். “எழுக தமிழ்”, எமது மக்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியுள்ளன. இது தொடர வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X