2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'தெற்கிலிருந்து வேலையாட்களை வருவிப்பது தவறு'

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மக்களுக்கு நான் எதிர்புடையவன் அல்ல. ஆனால் போரிலிருந்து விடுபட்ட மக்கள் அரை வயிறு கஞ்சிக்கு அல்லல்படும்போது தெற்கிலிருந்து வேலையாட்களை வருவிப்பது தவறு என்றே கூறுகின்றேன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட பிராந்திய தலைமையக தனியார் வங்கி ஞாயிற்றுக்கிழமை (20) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பின்தங்கிய கிராமம் போல் காட்சியளித்த யாழ்ப்பாண நகரம் விரைவான புதிய கட்டடங்களின் தோற்றத்தின் காரணமாக மிளிரத் தொடங்கியுள்ளது. எனினும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியான போரினால் ஏற்பட்ட வடுக்களின் பயனாக இரவு 7 மணிக்குள் யாழ். நகரம் முற்று முழுதாக முடங்கி விடுவது தவிர்க்க முடியாததாகியிருந்தது. ஆனால், இது போன்ற வர்த்தக நிறுவனங்களின் தோற்றத்தின் மூலம் இரவு 10 மணி வரை மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்கள், காய்கறி, பால்மா என அனைத்துப் பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொண்டு செல்லக் கூடியதாக இப்போது இருப்பது மகிழ்வைத் தருகின்றது. இரவு நடமாட்டம் இதன் பயனாக நீட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இப் பகுதிகளில் உள்ள எம் மக்களின் குறைகளைப் பற்றியும் நாம் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். போரின் பின்னராக இங்கே பல மாடிக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இது போன்ற பெரிய விற்பனை நிலையங்கள்கூட உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் இக் கட்டட வேலைகளுக்கும்  இந்த நிறுவனங்களில் கடமையாற்றுவதற்கும் ஊழியர்களை தென் பகுதியில் இருந்து அழைத்து வந்து தமது காரியங்களை ஆற்றுவது எம்மை வேதனைக்குள்ளாக்குகின்றது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு புதிய தொழில் முயற்சிகளில் அனுபவம் இல்லை. அதனாலேயே தெற்கில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை இங்கே கொண்டு வருகின்றோம் என்பதே அதற்கான காரணமாக கூறப்படுகிறது. இக் கூற்று சில வேளைகளில் சரியானதாகவும் அமையக்கூடும். அப்படியானாலும் இங்கிருக்கக்கூடிய இளைஞர், யுவதிகள் தமது தொழிலில் திறன் பெறுவது எப்போது?எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X