2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'நோர்வே தொடர்ந்து நெருக்குதலை கொடுக்கும்'

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கையாள்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம் நெருக்குதலைக் கொடுக்கும்' என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோன் கெஸ்ராட்செதர் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நோர்வே தூதுவருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (27) மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

'வடமாகாணத்தில் நோர்வே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் ஆராயும் பொருட்டு அவர் இங்கு வருகை தந்தார். நோர்வே நாட்டுக்கும் தமிழர்களுக்கு இடையில் நெருங்கி தொடர்பு உறவு உள்ளது என்பதை அவர் எனக்குக் கூறினார். இந்த நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, ஜனநாயக பயணம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து முழு நன்மைகளையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் என்னிடம் கேட்டுகொண்டார்.

அதற்கு நான் பதிலளிக்கும் போது, இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு பெரிதும் உதவியவர்கள் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் ஆவார்கள். நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் இல்லை. நாங்கள் அரசாங்கத்தை கேட்பது, முன்னைய காலத்துக்கும் தற்போதும் எந்த வித்தியாசம் உள்ளது என்பதையே. பழைய மனோநிலை தற்போதும், தொடர்கின்றது.

மேலும், அரசியல் கைதிகள் தொடர்பில் காத்திரமான முடிவை எடுத்திருக்க முடியும். பிணையளிப்பதாகக் கூறி ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஆட்பிணை கோருவது என்பது. ஒரு கையால் தந்து மறுகையால் திருப்பி எடுப்பதாக அமைகின்றது. இது எமக்கு வேதனையளிக்கின்றது. அரசாங்கம் தனது கடப்பாடுகளை செய்வதற்கு முனைய வேண்டும். நல்லிணக்கம் என்பதற்காக ஆக்கபூர்வமான அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவருக்கு எடுத்துக்கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.

கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர் என்னிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

இத்தனை காலமும் காத்துக்கொண்டிருந்தோம். அரசாங்கம் காரணங்களை காட்டி எங்களுடைய நாளாந்த பிரச்சினைகளை தீர்வு காணமுடியாமல் இருக்க முடியாது. சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் என்னை தொடர்புகொண்டு, எங்கள் விடுதலைக்காக என்ன செய்கின்றீர்கள் எனக்கேட்கின்றனர். அவர்களுக்கு பதலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கின்றது. ஆனால் முடிவு இல்லை. சுமார் 300 பேரை விடுதலை செய்வதற்கு அரசாங்கத்துக்கு என்ன பிரச்சினை இருக்கப் போவது என்பது எங்களுக்கு விளங்கவில்லை.

10 ஆயிரம் புலிகளுக்கும், 2 தடவைகள் ஜே.வி.பி யினருக்கும் பொது மன்னிப்பு வழங்கிய அரசாங்கம் ஏன், இவர்களை விடுதலை செய்யாமல் இருக்கின்றது என்பதை அவருக்கு எடுத்துக்கூறினேன்.

பொருளாதார நன்மைகள், குறிப்பாக மீன்பிடித் தொழில் விருத்தி தொடர்பில் அவருடன் பேசினேன். செயற்றிட்டங்களை பற்றியும் அவற்றை தொடர்ந்து செய்வதாகவும் அவர் எனக்கு வாக்களித்தார்.

வெளிநாடுகளிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. மத்திய அரசாங்கம் ஊடாக வருவதால் தாமதங்கள் பிரச்சினைகள் உள்ளன என்பதை அவருக்கு எடுத்துக்கூறினேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு நடவடிக்கை எடுப்பதாக சம்மதம் தெரிவித்திருந்த போது, சில தடங்கல்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லையென அவருக்கு கூறினேன்.

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்த கால அவகாசத்துக்குள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாக அரசாங்கத்துக்கு நினைவூட்டுவதாக தூதுவர் எனக்குக் கூறினார்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .