2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'நில ஆக்கிரமிப்புக்களை நல்லாட்சி அரசாங்கம் ஆமோதிக்கின்றதா?'

Menaka Mookandi   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற காணிகள் ஆக்கிரமிக்கப்படும் செயற்பாடுகளை கடந்த அரசாங்கத்தைப்போல இந்த புதிய நல்லாட்சி அரசாங்கமும் ஆமோதிக்கின்றதா?' என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மீள்குடியேற்றத்தின் பின்னரான காலப்பகுதிகளில், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற காணிகளை அபகரித்து இராணுவ முகாம்களை நிறுவி வருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான மக்களின் காணிகள் இவ்வாறாக ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயங்கள் என அடையாளப்படுத்தி சிங்கள மக்களை குடியமர்த்தியும் புத்த விகாரைகளை கட்டியும் எம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலைமைக்கு எதிராக, கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு பல்வேறுபட்ட மக்களும் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தபோதும் அப்போதைய அரசாங்கம் அவற்றை உதாசீனம் செய்தே வந்தது.

இவ்வாறான நிலையில், மக்கள் மீதான நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தினாலும்  மறைமுகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்களின் காணிகள், இன்றுவரை விடுவிக்கப்படாதுள்ளதுடன் கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு மாதிரிக் கிராமங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பெரும்பாண்மையின மக்கள் கடற்கரைகளில் குடியமர்ந்துள்ளனர். இச்செயற்பாடு யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொக்குளாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த கோவில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையே. தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றி நிர்க்கதி நிலைக்குள்ளாக்கிவிட்டு புத்தரை குடியமர்த்த வேண்டிய அவசியம் என்ன? பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை கட்டுவதன் நோக்கம் என்ன?

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கங்கங்கள் காலங்காலமாக முன்னெடுத்துவருகின்ற ஆக்கிரமிப்பு செயற்பாடுகளையே  வெளிப்படுத்தி நிற்பதுடன் இவ் அரசாங்கமும் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்ததாது எம் மக்களை தொடர்ந்தும் புறக்கனித்து வருகின்றது.

தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்களுக்கு எகெதிராக எமது மக்களின் போராட்டங்களை இவ் அரசாங்கம் பாராமுகமாக இருப்பின் அவை பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும். எமது மக்கள் தமது சொந்த நிலங்களையே கோரி போராடுகின்றனர். எனவே இவ்வாறான நிலைகளில் இவ்வரசாங்கத்தை உருவாக்கியதில் எம் மக்களுக்கும் உயரிய பங்குள்ளது என்பதனை நினைவிற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் இடங்களை விரைவில் விடுவித்து எமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அவர்களின் பொருளாதார மீள் கட்டுமானத்துக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X