2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்தில் அனலைதீவு உள்ளிட்ட பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காணிகளை உரிமையாளர்களின் ஒப்புதலின் அடிப்படையில், விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தை வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பயன்படுத்தப்படாத காணிகளை கையேற்பதற்கு அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது. தங்கள் காணிகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள், இங்குள்ள தங்கள் காணிகளை விற்பனை செய்கின்றனர்.

வடமாகாணத்துக்கு வெளியில் உள்ளவர்களும் வந்து, இங்குள்ள காணிகளை வாங்குகின்றனர்.

மேற்படி காணிகளை வடமாகாண விவசாய அமைச்சு அல்லது அமைச்சின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் பயிர் செய்து, அதில் பெறும் வருமானத்தில் ஒரு பகுதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்கலாம்.

இது தொடர்பில் காணி உரிமையாளர்களிடம் கேட்டபோது, காணிகளில் விவசாயம் செய்தால், தங்களுக்குத் தேவையான போது காணிகளை மீளவும் தருவீர்களா எனக் கேட்கின்றனர். அதற்கு நான் ஆம் என்றவுடன், அவர்கள் தங்கள் காணிகளைத் தருவதாகக் கூறினர் என்றார்.

'இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் உள்ள சட்ட அனுசரணை மற்றும் சிக்கல், நிதி தேவைப்பாடுகள், காணிகளின் எல்லைத் தகராறுகள் குறித்து கவனம் செலுத்துகின்றோம்.

மேலும், இந்தச் செயற்திட்டத்தில் தனியார் துறையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பிலும் ஆராய்கின்றோம்.

வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகள் மக்களின் நன்மைகளுக்கு பயன்படுத்தப்படும். இதன்மூலம், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன், இள விவசாய பணியாளர்களையும் உருவாக்க முடியும்.

இந்த செயற்திட்டத்தை முன்வைத்து களஞ்சியசாலைகளை அமைக்க முடியும். அதற்கு அரசாங்கம் உதவி செய்யும்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X