2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்தையே கூறினேன்'

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

“பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களையே ஊடக சந்திப்பின் போது நான் கூறினேன். மேற்கொண்டு எதுவும் எனக்குத் தெரியாது” என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) ஆஜராகினார்.

லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இருவரும் கடத்தப்படவில்லை பொலிஸாரின் விசாரணையில் இருக்கின்றனர்கள், விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார் என நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கிணங்க கெஹலிய றம்புக்வெல இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.

'பாதுகாப்பு அமைச்சுக் கூறிய கருத்துக்களை நான் கூறினேன். அதனைவிட வேறு என்ன தெரிவித்தேன் என எனக்கு ஞாபகம் இல்லை' என்றார்.

இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதிவான் சி.சதீஸ்தரன் ஒத்திவைத்தார்.

முன்னணி சோசலிச கட்சியை சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் மோட்டார் வண்டியில் சென்றபோது, 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். 

அவர்கள் பயணம் செய்த மோட்டார் வண்டி கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அவர்கள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் என, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்டு, வழக்கு விசாரணை தற்போது யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X