2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'மோசடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

'எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், போக்குவரத்துடன் தொடர்புபடுக்கின்ற அனைத்து நலன்புரிச்சங்கங்களும் போக்குவரத்து நியத்திச்சட்டத்துக்கு அமைவாக, அதிகாரசபையின் கீழ், பதிவுசெய்ய வேண்டும். சங்கங்களின் நிதிசார்ந்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டப்படியான கணக்காய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மோசடிகள் காணப்படின் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,  வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அ.நீக்கொலஸ் பிள்ளை, வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்க ஒன்றியத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர், ஏனைய மாவட்டங்களின் தனியார் பஸ் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

'வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பில் உரிமையாளர்களும், சாரதிகளும் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் என்றும்,  மாணவர்கள் மற்றும் முதியவர்களிடம் சாரதி, நடத்துநர் ஆகியோர் ஒழுக்கமான முறையில் நடத்த வேண்டும்மென்றும் பொதுமக்களுக்கு சௌகரியமான சேவையை வழங்கவேண்டும்' எனவும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

'போக்குவரத்துச் சங்கங்கள் பலவற்றில் நிதி மோசடிகள் இடம்பெற்றமை, கொடுக்கப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படாது இழுபறிநிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான, முறைகேடுகளுக்கு அந்தந்தக் காலப்பகுதியில் இருந்த சங்க உறுப்பினர்களும் புதிதாக பதவி ஏற்பவர்களும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'சங்க நிர்வாகத்தில் உள்ளவர்கள், உரிமையாளர்களின் நலன் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தவேண்டும்.

உரிமையாளர்கள், சங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

'வழி அனுமத்திப்பத்திரத்தை வைத்திருப்போர் சட்டத்துக்கு முரணான வகையில், அதனை ஏனையவர்களுக்கு விற்பனை செய்திருந்தால், அனுமதிப்பத்திரத்தை கொடுத்தவர்களுக்கும் அதனை வாங்கியவர்களுக்கும் எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறான அனுமத்திப்பத்திரங்கள், எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இரத்துச்செய்யப்படும்' எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X