2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'மீனுக்கும் மீனவனுக்கும் எல்லை இல்லை'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு இருதயம் எனும் மீனவர் கோரியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்திருந்த ஜேசு இருதயம் எனும் மீனவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

'எதிர்வரும் 2ஆம் திகதி ஒரு பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றார்கள். அந்தப் பேச்சு வார்த்தை மூலம் இலங்கையிலுள்ள 123 எமது படகுகளையும் விடுவிக்க வேண்டும். அதேபோன்று மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

போர் காலத்தில் மூன்று வேளை பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். தற்போது இலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். நாம் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

தொழிலுக்கு வந்தால் எல்லை தாண்டி வந்து விட்டோம் என இலங்கைக் கடற்படையினர் எம்மை கைதுசெய்கின்றார்கள். இதனால் நாம் தொழிலுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை கஞ்சிக்கே வழியின்றி தற்போது வாழ்கின்றோம்.

எனவே, பேச்சுவார்த்தை மூலம் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன் வர வேண்டும். இலங்கைக் கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் தான் வருகின்றோம். ஆனால், இந்தியாவைச் சூழவுள்ள கடல் முழுவதும் இலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள்.

மீனுக்கு எல்லை இல்லை. அதேபோல மீனவனுக்கும் எல்லை இல்லை. எனவே, சில விட்டுக்கொடுப்புக்களுக்கு இலங்கை மீனவர்கள் முன்வந்து எமது வயிற்றுப் பிழைப்புக்கு வழி சமைத்துத் தர வேண்டும் எனக் கோருகிறேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X