2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'மிருகபலிக்கு எதிரான தடையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்'

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

'யாழ்ப்பாணத்து ஆலயங்களில் மிருக பலியிடலுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை, எதிர்காலத்தில் மனிதநேயம் மிக்க சமூகத்தை உருவாக்க உறுதுணையாக அமையும். இந்த சந்தர்ப்பத்தை சைவ அமைப்புக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என அளவெட்டி சைவ வாலிப சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி சங்கம், இன்று திங்கட்கிழமை (04) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யுத்தத்துக்கு பின்னர் யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியில் தோன்றியிருக்கின்ற வன்முறைச் சம்பவங்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் சூனியமாக மாறிவிடுமோ? என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.  

இந்த வன்முறைப் போக்கை இல்லாதொழித்து, எதிர்காலத்தில் மனிதநேயம் மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டுமாயின் மாணவர்களிடையே மனிதநேயமிக்க அறநெறிக் கருத்துக்களை விதைக்க வேண்டும். இந்த அறநெறிக்கு முற்றிலும் எதிரானதாகவே ஆலயங்களில் மிருக பலி இடம்பெற்று வருகின்றது. இது மக்களிடையே குரோத உணர்வை வளர்க்கின்றது.

இந்த மிருக பலியை நிறுத்தி எமது எதிர்காலத்தை நல்ல சமுதாயமாக கட்டியமைப்பதற்காக அகில இலங்கை சைவ மகா சபை ஏனைய சைவ அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றது.

இந்தப் போராட்டங்களின் பயனாகவே மிருக பலியிடுதலுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது. சைவத்தமிழ் மக்களின் வாழ்க்கையில் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதற்கு இந்த தீர்ப்பு உறுதுணையாக அமையும்.

யாழ்ப்பாணம் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடெங்கும் வசிக்கும் சைவத்தமிழ் மக்கள் எமது எதிர்கால சமூகத்தை மனிதநேயம் மிக்க ஆன்மீக வழியில் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம்' என இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆலயங்களில் விலங்குகளை பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளுக்கு உடனடியாக தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு அகில இலங்கை சைவ மகா சபை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், மிருகவேள்விக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து கடந்த 1ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X