2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கறுப்புக்கொடி போராட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்;ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (13) கறுப்புக்கொடிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இனப்படுகொலை, போர்க்குற்றம் ஆகியவற்றுக்கு நீதி வேண்டும், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமாகப் பயன்படுத்தி நிரந்தர தீர்வு காணப்படவேண்டும், தமிழ் மக்களின் நிலங்களை தொடர்ந்தும் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பதை நிறுத்தி இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல்போன மற்றும்  கடத்தப்பட்ட 14 ஆயிரம் பேருடையதும் போரில் சரணடைந்த போராளிகள், அவர்களின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட 6 ஆயிரம் பேருடையதும் நிலைமைகள் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் மற்றும் அரசியல் கைதிகள் 217 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும். இல்லையேல் குறுகிய காலத்துக்குள் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே யாழில் தேசிய பொங்கல் விழாவை நடத்த வேண்டும். அதற்கு முன்னர் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதில், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும்  வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் க.சதீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X