2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'வட மாகாண சபை, வினைத்திறனற்ற சபை'

Niroshini   / 2016 மார்ச் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'தகவல் அறியும் சட்ட மூலம், வட மாகாண சபையின் பரிந்துரைக்காக டிசெம்பர் மாதம் கிடைக்கப்பெற்றும், இன்னமும் அதற்கான அனுமதியை வழங்காது இருப்பதால், வட மாகாண சபை, வினைத்திறனற்ற சபையென மீண்டும் மீண்டும் வெளியாட்கள் கூறுவார்கள்' என எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்ட மூலத்துக்கு பரிந்துரைகளை வழங்கும் வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று வியாழக்கிழமை (10) வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

'மேற்படி சட்டமூலம் தொடர்பில் கருத்துக்கள் அறியாமல் 3 மாதங்கள் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளன எனத் தெரியவில்லை. ஏற்கெனவே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பெருமளவான பிரேரணைகள் எவ்வித நடவடிக்கைகளுமின்றி கிடப்பில் கிடப்பதால், வினைத்திறனற்ற சபையென வட மாகாண சபையை மக்கள் கூறுகின்றனர். இந்தச் சட்ட மூலத்தின் தாமதத்தாலும் தொடர்ந்தும் அதையே கூறவுள்ளனர்' என்றார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில்;,

'இந்தத் தாமதத்துக்கு நானே பொறுப்பு. கடந்த டிசெம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடாக எனக்கு இந்த சட்டமூலம் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டது. எனது தனிப்பட்ட பரிந்துரைகள் மாத்திரமல்ல, வட மாகாண சபை உறுப்பினர்களின் பரிந்துரைகளும் இதனுள் உள்ளடக்கடவேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று இதனைச் சபையில் சமர்ப்பிக்கின்றேன்' என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,

'மத்திய அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை தனியே முதலமைச்சருக்கு அனுப்பியது தவறு. மாகாண சபைக்கு அனுப்பியிருக்க வேண்டும்' என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

'இந்தச் சட்டமூலம் தொடர்பில் ஒவ்வொருவரும் பரிந்துரைகளை வழங்க வேண்டும். சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது, திருத்தங்களை மாத்திரம் அனுப்பாமல் அதன் மூலச் சட்டங்களையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்மூலமே பரிந்துரைகளை வழங்க முடியும்.

இனிவருங் காலங்களில் பரிந்துரைகளுக்காக நிறை சட்டமூலங்கள் கிடைக்கும். அவற்றை மாகாண சபைக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X