2025 ஜூலை 19, சனிக்கிழமை

'வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் அவதூறு பரப்ப வேண்டாம்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்ரன் மீது சில ஊடகங்கள் அவதூறு செய்தியை பரப்பி வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள், எதிர்கால கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு வேதனையூட்டுகின்ற விடயங்களாக அமைந்துள்ளது என துணுக்காய் கோட்டத்துக்குட்பட்ட அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார், ஆசிரியர்களின் சம்பளங்களை நிறுத்தி வைத்தல், மோசடிகளில் ஈடுபடுகின்றார் என பத்திரிகையொன்றில் கடந்த வாரம் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கமும் கல்விப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.

துணுக்காய் கோட்டத்துக்குட்பட்ட அணிஞ்சியன் குளம் தமிழ் வித்தியாலயம், மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம், திருநகர் தமிழ் வித்தியாலயம், தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, துணுக்காய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயம், கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஐயன்கண்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தேறாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி, கல்விளான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, புத்துவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, உயிலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் அதிபர்கள் இணைந்து மேற்படி குற்றச்சாட்டை மறுத்து திங்கட்கிழமை (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

துணுக்காய் கல்வி வலயமானது இடப்பெயர்வின் பின் மீளக்குடியேறிய அனைத்துப் பாடசாலைகளும் கல்வி அபிவிருத்தி, பௌதீக வள அபிவிருத்தி, இணை பாட விதானச் செயற்பாடுகள் யாவற்றிலும் மிகப்பாரிய மாற்றத்துக்கு உள்ளாகி வெற்றிகண்டு வருகின்றது.

இந்த நிலைக்குரிய காரணம் தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளரின் முற்போக்கான நீண்ட கால சிந்தனைகளும் தளராத முயற்சியும் அயராத சேவையும் கொண்ட சிறப்பான முகாமைத்துவமே ஆகும்.

பௌதீக வள அபிவிருத்தியில் அனைத்துப் பாடசாலைகளுக்குமான வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீருக்கான குழாய் நீர் வசதிகள் இலத்திரனியல் வசதிகள், மலசலகூட வசதிகள், உணவு களஞ்சிய அறை மற்றும் சமையல் அறை, ஆய்வுகூட வசதிகள், நூலக வசதிகள், மின்சார இணைப்பு வசதிகள் யாவும் முன்னுரிமை அடிப்படையில் உரிய காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளாக ஆரம்பிக் கல்வியில் உரிய தேர்ச்சிகளைப் பெற்று அடைவு மட்டம் படிப்படியாக உயர்ந்துள்ளதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திவீதம் கடந்த வருடம் (2015) 92 வீதமாக உயர்ந்துள்ளமை மிகப்பெரிய சாதனையாகும்.

3ஆம் நிலைக்கல்வியை வெளிவாரியாக தொடர்வதற்கும் தொழில் வாய்ப்பை பெறவும் தொழில்பயிற்சி நிலையமானது எமது பணிப்பாளரின் அயராத முயற்சியால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

அனைத்து முன்பள்ளிகளும் தற்போதைய நவீன கல்விச் செயற்பாடுகளுக்கு அமைய  கட்டடங்கள், கற்றல் உபகரணங்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆரம்பக் கல்விக்கும் அடித்தளம் சிறப்பாக உயரிய சிந்தனையுடன் பணிப்பாளரின் முயற்சியாலும் அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களினாலும் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

எமது கல்வி வலயத்தில் ஓர் ஆசிரியர் மட்டும் கொண்ட பாடசாலை எதுவும் இல்லாமலும் ஆசிரியர் பற்றாக்குறைகள் பொருத்தமாக நிவர்த்திக்கப்படுவதும் சிறப்பான முகாமைத்துவத்தின் வெளிப்பாடாகும்.

மேலும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கான சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள், சுய விபரக்கேவைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளமை, விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய இலக்கம் பெற்றுக்கொள்ளல், சம்பள நிலுவைகள் என்பன உயரி காலத்தில் ஏனைய வலயங்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு அந்தந்த கிராமங்களிள் உள்ள பாடசாலைகளில் உரிய முறைப்படி வளமாக்கப்பட்டு கவின்நிலையுடன் காட்சியளிப்பதால் அக்கிராம மாணவர்கள் அக்கிராமத்திலேயே விருப்புடன் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு சாதனைகளைக் கொண்ட துணுக்காய் கல்வி வலயம் இன்று வடமாகாண சபையால் முன்னோடி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மறுசீரமைக்கப்படுகின்ற பல பணிகள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் வலயத்தின் பணிப்பாளரைப் பற்றி அவதூறான விடயங்களைப் பத்திரிகை வாயிலாக வெளிவருவது எதிர்கால கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு வேதனையூட்டுகின்ற விடயங்களாக அமைந்துள்ளது எனவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X