2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விடுவிக்கப்பட்ட காணிகள் தரிசு நிலங்களாகின்றமை கவலையளிக்கின்றது

George   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விடுவிக்கப்பட்ட காணிகள், தரிசு நிலங்களாகக் காட்சியளிப்பது கவலைக்குரியதாக காணப்படுகின்றது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண தென்னை அபிவிருத்திச் சபையால் பயிர்ச் செய்கையாளர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு, நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இன்று யுத்தம் முடிவுற்று 7 வருடங்கள் முடிவடைந்து விட்டன. பலரின் காணிகள் விடுவிக்கப்பட்டு 5 அல்லது 6 வருடங்களுக்கு மேற்பட்ட போதும், அவற்றில் இது வரை எந்தவித பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளாது, அவை தரிசு நிலங்களாக காணப்படுவது வேதனைக்குரியது.

நீண்டகால இடப்பெயர்வு, அவர்களை தூர இடங்களில் குடியமரச் செய்துவிட்டதால் அவர்கள் தமது பாரம்பரிய காணிகளில் வந்து குடியிருக்கவோ அல்லது பயிர்ச் செய்கைகளில் ஈடுபடவோ பின்நிற்கின்றார்கள். பலரின் முதுமையும் அவர்களைப் பின்நிற்க வைக்கின்றது. இவ்வாறான, காணி உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் காணிகளை குத்தகைக்கு எடுத்து அவற்றை வளம்படுத்த தென்னை அபிவிருத்திச்சபை முன்வர முடியாதா? என பரிசீலிக்கவேண்டும்.

அன்றைய கிராமிய வாழ்க்கை முறைமை எளிமையானதாக அமைந்திருந்தது. அன்று அவர்களிடையே போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஆடம்பரச் செலவு இல்லை. குறுகிய வருமானத்தில் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால், யுத்தத்தால் ஏற்பட்ட தாக்கம் அவர்களை நகர்ப்புறம் நோக்கி நகரச் செய்தது. பிள்ளைகளைக் கற்பிப்பதற்கு சிறந்த பாடசாலைகள் தேவையாயிருந்தன. பொழுதுபோக்குச் சாதனங்கள் மற்றும் இன்னோரன்ன வசதிகள் அவர்களை நகர்ப்புறங்களில் வரவேற்றன. இவை அவர்களை மீண்டும் கிராமத்துக்குச் செல்லவிடாது தடுக்கின்றன.

விட்டுச் சென்றவர்கள், கிராமங்களுக்கு வந்து பயனுள்ள அமைதி வாழ்க்கையை வாழுங்கள் என்று நாங்கள் அவர்களிடம் கோரிக்கை விடுகின்றோம். ஆனால், அவர்கள் வராவிட்டால் கூட இங்குள்ள தரிசு நிலங்கள் அனைத்தும் தென்னந்தோப்புக்களாக மாற்றப்படவேண்டும். தென்னை அபிவிருத்திசபையும், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அதற்கு தேவையான உதவிகளை மக்களுக்கு வழங்கி,  பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படல் வேண்டும்” எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X