2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'வெளிச்சவீடுகள் தொல்லியல் சின்னமல்ல'

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கலங்கரை விளக்குகள் என அழைக்கப்படும் வெளிச்சவீடுகள், தொல்லியன் சின்னம் இல்லை' என சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (29) தெரிவித்தார்.

அனலைதீவு பகுதியில் அமைந்துள்ள வெளிச்சவீட்டில் மேற்பகுதியில் அமைக்கப்பட்ட இடிதாங்கியில் பொருத்தப்பட்டிருந்த செப்புக் கம்பிகளை திருடிய ஐந்து பேர் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில், நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் 5 சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி ஸ்ரீகாந்தா வாதாடினார். 

'வெளிச்சவீடு தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது இல்லை. வெளிச்சவீடு தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது என, திணைக்கள பணிப்பாளரிடமிருந்து கடிதம் வந்தது. ஆனால் அதில், வெளிச்சவீடு எப்போது கட்டப்பட்டது மற்றும் தொல்லியல் சின்னத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் என்பன இல்லை.  1815ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்போது, அந்தத் திகதிக்கு முற்பட்டவை மாத்திரம் தொல்லியன் சின்னங்கள் என அறிவிக்கப்பட்டன.

1850ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னதானவை தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்படவேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டது. கலங்கரை விளக்கு பிரித்தானியர் காலத்தில் தான் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அது பற்றி யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது.

ஆகவே, கலங்கரை விளக்கு தொல்லியன் சின்னம் என்பதை ஏற்றுக்கொண்டு, சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்' என்று கோரினார்.  அதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிவான், 'இது தொடர்பில் கேள்வி, பதில்கள் மூலம் உறுதிப்படுத்தவேண்டும். தொல்லியல் சின்னம் என்றால் எந்த வகையில் அமையவேண்டும் என்பது தொடர்பில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும்.

தொல்லியல் சின்னத்துக்கான விதி, வர்த்தமானி அறிவித்தல், சட்டவலு ஆகியவை உறுதிப்படுத்தப்படவேண்டும். அவற்றை பணிப்பாளர் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்
இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X