2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஈ.பி.டி.பி.யின் உயர்மட்ட பிரதிநிதிகள் இந்திய காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுடன் சந்திப்

Super User   / 2011 ஒக்டோபர் 30 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆளும் இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாச்சியப்பனுடன்  நேற்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இச்சந்திப்பின் போது பிரதானமாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து விரிவாக பேசப்பட்டதாக ஈபிடிபியின் செய்திக் குறிப்பிபொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பயனாக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதை மேலும் வளர்த்தெடுத்து அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையே தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவாதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகள் இச்;சந்திப்பின் போதும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்மையில் பல்வேறு தமிழ் கட்சிகளையும் அழைத்து புதுடில்லியில்  சுதர்சன நாச்சியப்பன்; நடத்தியிருந்த மாநாட்டு முயற்சிகளை பாராட்டியும் இருந்தனர்.

ஆனாலும் அதில் கலந்து கொண்ட சக தமிழ்க் கட்சிகளால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரமுடியாமல் போனமை கவலை தரும் விடயமாக இருப்பினும், தமக்கு இது ஆச்சரியமானதொரு விடயம் அல்ல என்றும் வெறும் தேர்தலுக்காக மட்டும் கூட்டுச் சேர்ந்திருக்கும் இவர்களால் கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருமித்த முடிவிற்கு வர முடியாமல் போன வரலாற்றுத் தவறுகள் உண்டு என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பில் எடுத்து விளக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்திருந்த சுதர்சன நாச்சியப்பன், தாம் முன்னெடுத்திருந்த புதுடில்லி மாநாடு தமிழ் மக்களுக்கு மறுபடியும் கிடைத்திருந்த அரிய சந்தர்ப்பம் என்றும் ஆனாலும், அதில் கலந்து கொண்ட சக தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கத் தவறியமை துரதிஷ்ட வசமானது எனவும் தனது மனத்துயரத்தை வெளிப்படுத்தியதாக ஈபிடிபியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது வழமைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சுயலாப அரசியலுக்காக புதிதாக கிளப்பி விடப்பட்டிருக்கும் காணி உரித்துப்பதிவு குறித்த திட்டமிட்ட புரளிகள் விடயமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பில் விரிவாக எடுத்து விளக்கப்பட்டதோடு  காணி உரித்து பதிவுச் சட்டமானது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு விடயமாக இருந்திருந்தால் அதை நிச்சயம் எதிர்த்திருப்பதோடு, அது குறித்து அரசாங்கத்தோடு நியாயம் கேட்டு பேசியிருப்போம் என்றும் எடுத்து விளக்கப்பட்டது.

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கான துரித அபிவிருத்திப் பணிகள், இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகள், மற்றும் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டம்  என பல்வேறு விடயங்கள் குறித்தும் மேலும் ஆற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஈ.பி.டி.பி. தரப்பினரால்  விரிவாக எடுத்து விளக்கப்பட்டது.

இதன் போது ஈழத்தமிழர்களின் துயர்களை துடைப்பதற்கு தாம் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை என்று திரு சுதர்சன நாச்சியப்பன் அவர்களால்  உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அடைய முடியாததும், நடைமுறைக்குச் சாத்தியமற்றதுமான வெற்றுக் கோஷங்களால் தமிழ் மக்களே அவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்தன என்பன குறித்த கருத்து பரிமாற்றங்களும், அடைய முடிந்த நடைமுறைக்குச் சாத்தியமான வழிமுறையான 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து தொடங்கும் வழிமுறையே சாத்தியமானது எனவும், அதை விரைவாக முன்னெடுப்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான ஒரேயொரு வழிமுறை என்றும் இச்சந்திப்போது பரஸ்பரம் இணக்கம் காணப்பட்டது.
 
இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகிய சுதர்சன நாச்சியப்பனுடனான இச்சந்திப்பின் போது  யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றொபின் ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X