2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் டெங்குநோய் பரவும் அபாயம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 06 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த நாட்களை விட டெங்குநோய்த் தாக்கம் சற்றே உயர்வடைந்து காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பெய்த மழையைத் தொடர்ந்து டெங்குநோயை பரப்பக்கூடிய நுளம்புகள் அதிகளவில் பெருகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் யாழ்ப்பாணத்திலும் இந்தநோய் வேகமாகப் பரவக்கூடிய ஆபத்து நிலையேற்பட்டுள்ளது.
டெங்குக் காய்ச்சல் தொடர்பில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும். அன்றாடம் தமது சுற்றாடலில் டெங்குநோய் பரப்பக்கூடிய நுளம்புகள் பெருக்கமடையக்கூடிய சூழ்நிலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்வதன் மூலம் தம்மையும் தமது குடும்பத்தவரையும் அயலவர்களையும் டெங்குக் காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.  அத்துடன் டெங்குக் காய்ச்சலென சந்தேகித்தால் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை பெற்று நோயாளிக்குரிய சிகிச்சையையும் சரியான பாரமரிப்பையும் வழங்குவதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் ஏற்படாது தவிர்த்துக்கொள்ள முடியும்.

மக்கள் அனைவரும் தமது வீட்டுச் சுற்றாடல், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், மாதர் சங்கங்கள், சமய நிறுவனங்கள், பொதுவிடங்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் தமது வேலைத்தலங்களிலும் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை மற்றும் பாடசாலைச் சுற்றுச்சூழல் பிரதேசங்களிலும் டெங்குநோயைப் பரப்பும் நுளம்புகள் பெருக்கமடையக்கூடிய சிறிய நீர் தேங்கக்கூடிய தகரப்பேணிகள், இளநீர்க் கோம்பை, சிரட்டைகள், கண்ணாடிப் போத்தல்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், ஏனைய கொள்கலன்களை எரித்தோ அல்லது புதைத்தோ அகற்றுவதுடன் பூச்சாடிகளில் நீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பீலிகள், வாய்க்கால்களில் நீரை தடையின்றி வடிந்தோடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு ரயர்கள், மரப்பொந்துகள் போன்றவற்றிலும் நீர் தேங்கி நிற்காதவாறு மண்ணிட்டு நிரப்புதல் வேண்டும். நீண்ட நாட்களுக்கு நீரை சேகரித்து வைத்திருக்கும் தொட்டிகள், நீர்த்தாங்கிகள் போன்றவற்றில்  நுளம்புக் குடம்பிகள் இருக்கின்றனவா என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும்.

டெங்குநுளம்புப் பெருக்கம் தொடர்பாக உங்களது பிரச்சினைகள் தொடர்பாக முறையிடவும். ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும். உங்களது பகுதி பொது சுகாதாரப் பரிசோதகர்களுடன் தொடர்பு கொள்ளுங்களெனக் கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X