2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'பெண்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் அதிகம்'

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 06 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

குடும்பம், சமூகம், அரசியல் என்கின்ற சகல தளங்களிலும் ஆண்களை விட அதிகூடிய அநீதிகளை எதிர்நோக்குகின்ற பெண்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் அதிகமென விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்  நிறைவேற்று அலுவலரும் பெண்ணியவாதியுமான சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

'பால்நிலையும் அபிவிருத்தியும்' என்ற பயிற்சிநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'பால்நிலை சமத்துவத்தினை எமது பாரம்பரியங்களும் மதநிறுவனங்களும் ஆதரித்து நிற்கின்றன. இதனால்த்தான் பால்நிலை தொடர்பிலான பயிற்சிகள் அநேக அபிவிருத்தித் திட்டங்களிலும் உட்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். பால்நிலை அசமத்துவத்தினை கருத்தியல் அடிப்படையில் புரிந்து அகப்படுத்திக்கொண்டு, தமது கண்ணோட்டங்களை மாற்றி புதிய மூலோபாயங்களைக் கைக்கொண்டு சமூக உறவு முறைகளை முன்னேற்றகரமாக மாற்றுவதற்கு இப்பயிற்சிகள் வழிவகுக்கின்றன.
இவ்வாறு பார்த்தால், ஒரு பால்நிலைப் பயிற்சியாளருக்கு எந்தளவுக்கு சித்தாந்தத் தெளிவு இருக்க வேண்டுமென்பதை நாம் அனுமானித்துக்கொள்ளலாம்.

அது மட்டும் போதாது. இச்சித்தாந்தத்தை மக்களினது அன்றாட அனுபவங்களினோடு தொகுத்து அவர்களே தன்னுணர்வின் மூலம் அகப்படுத்தச் செய்தல் வேண்டும். அடுத்ததாக, ஒரு நீதியான சமூக மாற்றத்திற்கு விழையும் உத்வேகத்தை உருவாக்கி அதன் மூலம் சமூக மாற்றத்திற்கான புதிய யுக்திகளை அவர்கள் கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும். 

இந்த இடைவெளியை நிரப்பவே, விழுது அமைப்பு இந்த பால்நிலையும் அபிவிருத்தியும் என்கின்ற கற்கைநெறியினை செயற்படுத்தியது. அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மத்தியிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மத்தியிலும் பால்நிலை குறித்த விளக்கத்தினை ஏற்படுத்தி அவர்களை தமிழ் பேசும் பிரதேசங்களுக்கான பால்நிலை வளவாளர்களாகவும் பயிற்சியாளர்களாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். இப்பயிற்சியின் பாடவிதானத்தையும் அதற்குப் பொருத்தமான முறையில் வரைந்தோம்.

யாழ். மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ் பேசும் பிரதேசங்களிலெல்லாம் பயிற்சியாளர் தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்வார்களென நம்புகின்றோம். அதற்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
சமூக நீதியினை எந்த நிலையிலும் வேண்டி நிற்கும் சமூகமாக எம்மை மாற்றிக்கொள்வதற்காகப் பணி செய்ய வேண்டுமென சகல பயிலுனர்களையும் வேண்டுகின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X