2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

வறுமையிலுள்ளவர்களின் வாழ்வாதார நிலைமை கவலையளிக்கிறது: யாழ். அரச அதிபர்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களின்  வாழ்வாதார நிலைமை மிகவும் கவலையளிக்கின்றதென  அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர்  இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆறு வருட நிறைவை முன்னிட்டு சமுர்த்தி வீட்டுச் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளமுடியாத நிலையில் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ஏழ்மையைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்  உதவிபுரிய வேண்டும்.

வறுமை காரணமாக தங்களது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க முடியாதவர்களாக பெற்றோர்கள் இருக்கின்றனர். புதிய வீட்டுத்திட்டத்தில் அவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் எந்தவித தொழில் முயற்சியும் செய்ய முடியதாவர்களாக இருப்பவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.

யுத்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி வாடகை வீடுகளில் வாழ்பவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு வாடகை கட்டுவதற்கே அவர்களின் தொழில் ஊதியம் போதுமானதாக இருக்கின்றது.  யாழ்ப்பாணத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என்றார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 71 பேருக்கு வீடமைப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. ஒருவருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் இதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.சிவசிறி மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X