2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளமை அச்சுறுத்தலே தவிர பாதுகாப்பல்ல: சுரேஷ்

Super User   / 2012 மே 31 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் இராணுவத்தினர் நிறுத்தியிருப்பது எந்த வகையிலும் மாணவர்களுக்கு  பாதுகாப்பாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'யுத்தம் முடிவுற்றதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுகின்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இந்தத் தாக்குதல்கள் யாவும் ஒரே வகையானவையாகவும் இருக்கின்றது.

அதுமாத்திரமில்லாமல் இத்தாக்குதல்களை இராணுவ புலனாய்வு பிரிவினரே மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாரிய ஐயப்பாடுகள் இருக்கின்றன. நடந்து முடிந்த தாக்குதல்கள் எதிலும் சம்பந்தப்பட்ட எந்தவொரு குற்றவாளியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுவே இராணுவ பிரிவின் மீதான ஐயத்தை அதிகப்படுகின்றது.

பாதுகாப்புச் செயலாளரும ;கூட இராணுவ நடவடிக்கைகள் இப்போது பாரிய அளவில் மாற்றப்பட்டிருப்பதாகவும், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகை போட்டிகளில் குறிப்பிடுகின்றார். அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர்களினால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

பல்கலை;கழக மாணவர்கள் தமது உயிராபத்துக்கள் இருக்கின்றது என்றும் தமக்கான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழகத்தை பகிஷ்கரித்து வந்தனர். அதன் பின்னர், பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் மாணவர் அமைப்புக்கள் யாழ். மாவட்ட கட்டளை  தளபதியை சந்தித்து தமக்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தல்களை விளக்கி, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என கோரினர்.

அச்சமயத்தில் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் தெளிவுபடுத்தினர். ஆனால், யாழ்ப்பாண கட்டளை தளபதி புலனாய்வு பிரிவினரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை விடுத்து, இன்னும் மேலதிகமாக இராணுவத்தைக் குவிப்பதானது மாணவர்களுக்கு மேலதிக அச்சுறுத்தலே தவிர, பாதுகாப்பல்ல.

மாணவர்களது கோரிக்கைகளை இராணுவ தரப்பினர் புரிந்துகொண்ட விதம் வேடிக்கையாக இருக்கின்றது. உலகத்தின் பல பாகங்களிலும் பல்கலைக்கழகங்கள் ஒரு புனிதமான இடங்களாக போற்றப்படுகின்றன. இவ்வாறான பல்கலைக்கழகங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தவிர்க்கமுடியாத இறுதிக்கட்டத்தில் தான் இவர்கள் காவல்துறையின் பாதுகாப்பை நாடுவதுண்டு.

ஆனால் இங்கு, மாணவர்கள் இராணுவத்தினரின் மேல் குற்றம்சாட்ட அவர்களது பாதுகாப்பிற்கு இன்னமும் மேலதிக இராணுவத்தை பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் குவிப்பது என்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாணவர்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.

பாதுகாப்பு அமைச்சு இப்படியான இராணுவத்தினரை விலக்கி பல்கலைக்கழக மாணவர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆவணம் செய்ய வேண்டுமென்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X