2025 மே 19, திங்கட்கிழமை

'அழிந்துபோன பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தனியார்துறையின் பங்களிப்பும் அவசியமானது'

Kogilavani   / 2012 ஜூலை 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


முப்பது வருட யுத்தத்தின் அழிவுகளை சுமந்து அழிந்து போன பிரதேசத்தை மீளவும் கட்டியெழுப்ப தனியார் துறையினரின் பங்களிப்பும் அவசியமானது என ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.சுண்டிக்குளி தெற்கு கிறீன் கிங்ஸ் சன சமூக நிலைய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அமரர் டேவிற் அல்வின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் முப்பத்து மூன்று இலட்சம் ரூபா செலவில் கிறீன் கிங்ஸ் சன சமூக நிலையத்திற்கு ஒரு அழகான கட்டிடத்தினை கட்டிக்கொடுத்தமை முன்மாதிரியான வரவேற்கத்தக்க விடயம்.

இவர்களை முன்மாதிரியாக கொண்டு ஏனைய குடும்பங்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியில் பங்குகொள்ளவேண்டும். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து இங்கு வருகை தந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் பங்கெடுக்கும் அளவுக்கு தோற்றுவிக்கப்பட்டுள்ள இயல்புச் சூழலை நாம் மேலும் வலுப்படுத்தி எமது மக்களினதும் பிரதேசத்தினதும் வாழ்வையும் அபிவிருத்தியையும் முன்னேற்றகரமான  நிலைமைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் இந்த நாட்டில் முன்னனியில் விளங்கிய பிரதேசம் இன்று கவலையளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமையினை மாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அந்த பொறுப்பை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்கின்ற போது விரைவான முன்னேற்றகரமான நிலைமைக்கு எமது பிரதேசத்தை இட்டுச் செல்ல முடியும் என தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபை உறுப்பினரும் கிறீன் கிங்ஸ் சன சமூக தலைவருமான விஜயகாந் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஸ்னன், யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலய அதிபர் ஞானபிரகாசம், யாழ்.தூய மரியன்னை பேராலய பங்குத்தந்தை சகாயநாயகம் அடிகள், சுண்டுக்குளி தெற்கு கிராம அலுவலர் ஞானசேகரம், அமரர் டேவிற் அல்வினின்;; குடும்பதினர், சன சமூக நிலைய உறுப்பினர்கள்,  பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X