2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வன்முறைக்கு வன்முறையால் பதில் கூறவேண்டி வரும்: சி.வி.கே

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

வடமாகாண சபையில் இடம்பெறும் வன்முறை செயல்களும் இனிவருங்காலங்களில் வன்முறையாலேயே பதில் கூறவேண்டிய நிலை வரும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமர்வில், இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது பிரேரணை வடமாகாண சபையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கில எறிந்தமை தொடர்பில், உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
 
அவைத்தலைவர் சிவஞானம் கருத்துக்கூறுகையில், இந்த அசம்பாவிதம் இடம்பெற்றமை கவலைக்குரிய விடயம். நடைமுறைச்சட்டம் 68 சரத்து உறுப்புரிமைப்படி அவையை சீர்குலையக்ககூடாது என இருக்கின்றது. செங்கோலுக்கு தலை தாழ்த்தி வணங்க வேண்டும். 38 உறுப்பினர்களின் கௌரவுத்துக்குரிய செங்கோலை தூக்கி எறிந்தமை உறுப்பினர்களின் கௌரவத்தை பாதிப்பதாக அமைக்கின்றது.

இதன்போது, தனது சார்பான கருத்தை தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபையின் ஜனநாயக பெட்டகம் செங்கோல் அகும். உறுப்பினர்களின் உரிமையை பாதுகாக்கும் இந்த செங்கோல் எமது மக்களின் பல வருட கால போராட்டத்தின் பின்னர், தற்போது தான் வடமாகாண சபை அமைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றது.

இது தற்செயலாக நடந்த விடயமல்ல. ஏனெனில் செங்கோல் எறியப்படப்போகின்ற விடயம் சில ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரியும். இந்த சம்பவம் உறுப்பினர்களின் உறுப்புரிமையை சீர்குலைக்கின்றதாக உள்ளது. நான் இதனை எதிர்க்கட்சியாக கூறவில்லை, மாறாக உறுப்பினர் என்ற ரீதியில் தெரிவிக்கின்றேன்.

இது தொடர்பில் வருத்தப்படுவது மட்டுமல்ல சம்பந்தப்பட்டவரை தண்டிக்கவேண்டும். சில காலங்களுக்கு அவரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கவேண்டும் என்பதுடன் சட்டநடவடிக்கையும் எடுக்க வேண்டும். சிவாஜிலிங்கம் எனது நண்பர் தான். இருப்பினும் வடமாகாண உறுப்பினராக இந்த கருத்தை கூறுகின்றேன் என்றார்.

அவைத்தலைவர் கருத்துக்கூறுகையில், செங்கோல் தூக்கி எறிந்தமை தொடர்பில் சிவாஜிலிங்கம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தூக்கி எறிந்தமையால் செங்கோலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்வதற்கு 5 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டது. அதனை விரும்பினால் சிவாஜிலிங்கம் ஈடுசெய்யலாம். இல்லையேல் அதனை நான் செலுத்துவேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம், சபையில் மன்னிப்பு கோருவதற்கு நான் தயாராகவில்லை. உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டாலும் அல்லது உயிர் போனாலும் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். அத்துடன் செங்கோலில் ஏற்பட்ட பாதிப்புக்கு காசும் கட்ட முடியாது. போராட்டம் குறித்து தெரியாதவர்கள் எல்லாம் செங்கோலை பற்றி கதைக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், இந்த சம்பவம் வருத்தப்படவேண்டிய விடயம் தான். ஆனால் இந்த விடயத்தை பெரிதாக்காதீர்கள். இது தற்செயலாக நடந்தவிடயம். இதனை பெரிதாக்கி, தண்டனைகள் ஏதும் அறிவிக்கப்பட்டால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படும். உறுப்பினர்கள் இரண்டாக பிரியும் நிலையேற்படும். அது எதிர்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை தொனியில் கூறினார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் சயந்தன் கருத்துக்கூறுகையில், சிவாஜிலிங்கம் இவ்வாறு செய்தமை ஆட்சிமுறையில் ஏற்பட்ட கோபத்தில் இருக்கலாம். இது தற்செயலாக நடந்தவிடயம். இதனை பெரிதுபடுத்தவேண்டாம் என்றார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் தர்மபால செனவரத்தின, எங்களுக்குள் ஒற்றுமை இருக்கவேண்டும். சிவாஜிலிங்கத்துக்கு இவ்வளவு கோபம் கூடாது. அவர் ஆலயங்கள் சென்று தியானம் செய்து மன அமைதியை பெறவேண்டும் என்று கூறினார்.

எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக கருத்துக்கூறுகையில், ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் இருக்கின்றது. உங்களுக்குள் ஒற்றுமையில்லை என கருத்துக்கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 'எங்களுக்குள் ஒற்றுமையில்லை பிரிவு இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை தற்போது சபையில் ஏற்றுக்கொண்டால் அது ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரத்துக்கு வேட்பாளர்கள் பயன்படுத்துவார்கள்.

ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் உரிய ஆதாரங்களுடன் அந்த பிரேரஇணையை சபையில் எடுத்துக்கொள்ளுவோம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் எதிர்க்கருத்துக்கள் இல்லை. சரியான முறையில் கையாண்டால் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .