2025 ஜூலை 03, வியாழக்கிழமை

குழப்பம் விளைவித்தவர்களிடம் வாக்குமூலம் பெற பொலிஸ் குழு அனுராதபுரத்துக்கு சென்றது

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த 20ஆம் திகதி குழப்பம் விளைவித்தமை, நீதிமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, மற்றும் சட்டவிரோத கூட்டம் கூடி பொதுசமாதானத்துக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதாகி அனுராதபுரம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுராதபுரத்துக்கு சென்றுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதான 130 பேரையும் மூன்று குழுக்களாக பிரித்து 21ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 01ஆம், 03ஆம், மற்றும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண சிறையில் காணப்படும் இடப்பற்றாக்குறை காரணமாக சந்தேக நபர்கள் அனைவரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பொருட்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலங்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்.ஏ.ஜெயசிங்க பணிப்புரைக்கு அமைய இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுராதபுரத்துக்கு சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 20ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற வாளாகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டதுடன் நீதிமன்றுக்கு சேதம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .