2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்'

George   / 2015 ஜூலை 02 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவற்றை விடுவித்து மீள்குடியேறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மாவட்டச் செயலாளர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், "கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 181 குடும்பங்களும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 342 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்களுமென 807 குடும்பங்கள் மீள்குடியேற வேண்டியுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் மீள்குடியேற்றம் செய்ய முடியாது காணப்படுகின்றது. இராணுவம், கடற்படையினர், பொலிஸார் ஆகியோரின் பயன்பாட்டிலும் காணிகள் இருக்கின்றன.

இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

பிரதேச செயலாளர்கள், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவற்றை சென்று பார்வையிடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். அவற்றை விடுவித்து மக்களை மீளகுடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் வெடிபொருள் அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, கண்ணிவெடி அகற்றும் பிரிவின் பிராந்திய முகாமையாளருக்கு அறிவுறுத்தலை வழங்கி மிகவிரைவாக இவற்றை ஒரு கால அட்டவணை தயாரித்து பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

இதனை மாவட்டச் செயலகமமும் இணைந்து செயற்படுத்துவதற்கு தயாராக உள்ளது" என சுந்தரம் அருமைநாயகம் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .