2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளம் கிராம உத்தியோகஸ்தர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Super User   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - எம்.எஸ்.முஸப்பிர்


ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் புதிதாக நியமனம் பெற்ற பெண் கிராம உத்தியோகஸ்தர் ஒருவரை  வடமேல் மாகாண அமைச்சர் ஒருவர் தகாத வார்த்தைகளால் ஏசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்து அவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகஸ்தர்கள் இன்று புதன்கிழமை (17) அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களையும் சேர்ந்த கிராம உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் விடுமுறை பெற்று ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்று கூடி கறுப்பு பட்டிகளை கைகளில் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்திற்கு வந்துள்ள குறித்த வடமேல் மாகாண அமைச்சர், ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்தினுள் வைத்து பிரதேச செயலாளர் முன்னிலையிலேயே இந்த பெண் கிராம உத்தியோகஸ்தரை எச்சரித்து அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்களின் சங்கத் தலைவர் டப்ளிவ்.எம்.வன்னிநாயக்கா, சகோதர கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் இதற்குப் பின்னர் நடக்கக் கூடாது என்றும், சமாதான உத்தியோகஸ்தர்கள் என்ற வகையில் தாம் மிக அமைதியான முறையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இந்தச் சம்பவத்தினால் புதிதாக நியமனம் பெற்ற குறித்த பெண் கிராம உத்தியோகஸ்தர் மன அலுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் போது பல்வேறு எதிர்ப்பு வாசகங்களைக் கொண்ட கதாதைகளையும் கிராம உத்தியோகஸ்தர்கள் தாங்கி நின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கான பாதுகாப்பை சிலாபம் பொலிஸார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X