2025 மே 19, திங்கட்கிழமை

கொவிட்-19 ஊடரங்குத் தளர்வும் பொருளாதாரத் தாக்கங்களும் - பகுதி - 2

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 மே 18 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னான இலங்கையில், ஒட்டுமொத்தமாக ஏற்படக்கூடிய பொருளாதார ரீதியான பிரச்சினைகள், தனிநபர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில், ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தைச் செலுத்தியிருந்தோம். இன்றைய நாளில், கொரோனா வைரஸ் தாக்கங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடிய பொருளாதார பின்விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லது, தவிர்த்துக்கொள்ள ஒவ்வொரு தனிநபருமே பின்பற்ற வேண்டிய சில பொருளாதார ரீதியான விடயங்களைப் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாம் விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்குள் திரும்புகின்றபோது, நம் கண்முன்னே இரண்டு விதமான வாய்ப்புகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் அதிகமாக இருக்கும். 

ஒன்று, எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி, மாத வருமானத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில் பாதுகாப்பு இருக்கக்கூடிய தனிநபர்கள் இருப்பார்கள். இவர்களுக்கான மாத வருமானமாகக் குறித்த தொகையைப் பெறக்கூடியதாக இருக்கின்றபோதிலும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்னதாகப் பெற்ற சலுகைகள், மாதவருமான அளவுக்குக் கிடைக்கப் பெறாதவர்களாக இருப்பார்கள். 

இரண்டாவது தரப்பினர், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னராகத் தொழில்ரீதியான பாதுகாப்பற்ற நிலையில், எதிர்வரும் காலத்தைக் கடந்துசெல்ல, புதிய வருமான மூலத்தை நாடவேண்டியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு, நீண்டகாலத்தின் பின்னர், பொருளாதார சமநிலை வருகின்றபோது, பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்பக்கூடிய சூழல் இருக்கின்றபோதும், அது, எப்போது அமையுமென்கிற கேள்விக்குறியுடன் நாள்களைக் கடத்தவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பார்கள். 

எனவே, இந்த இரண்டு தரப்பினரும், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னரான காலப்பகுதியை, எவ்வாறான தயார்படுத்தலுடன் கடந்துசெல்ல முடியுமென்பதைப் பார்க்கலாம்.

முதலில், கொரோனா வைரஸ் பரவுகை காரணமாகத் தொழில் வாய்ப்புகள் தொடர்பில், நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருக்க வேண்டியவர்கள், எத்தகைய விடயங்களைப் பின்பற்ற வேண்டும், எவ்வாறு புத்திசாலித்தனமாகச் செயற்படவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

தொழில் ரீதியான பாதுகாப்பில்லாமல் போகின்ற சந்தர்ப்பத்தில், எல்லோருடைய மனதிலும், மிகப்பெரும் கேள்விக்குறியாக நிற்பது, அடுத்த மாதத்தில், என்னுடைய கடனுக்கான தவணைப்பணத்தை எப்படிச் செலுத்தப் போகின்றேன்? இல்லையெனில், பெற்றுக்கொண்ட குறுங்கடனை, எப்படிச் செலுத்தப் போகிறேன் என்பதாகும். 

உண்மையில், ஒரு நிரந்தர வருமானமொன்று இல்லையென்கிற நிலையில், இதை முழுமையாகச் செலுத்துவதென்பது இயலாத காரியமாகும். இந்தநிலையில், கடனை முழுமையாகப் பிற்போட வேண்டிய முடிவை அல்லது, உங்களது நிதியியல் இயலுமை அடிப்படையில், அந்தக் கடனை மீளசெலுத்தும் அளவைக் குறைக்க வேண்டிய முடிவை, நீங்கள் எடுக்க வேண்டியதாக இருக்கும்.

 தமிழ்ச் சமூகப் பரப்பில், 'கடனாளி' என்கிற சொல், புற்றுநோயைவிடக் கொடியதாகப் பார்க்கப்படுகிறது. இதனாலேயே, கடன்களைச் செலுத்த முடியாதோர், தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதைக்கூட, கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். எனவே, இந்தக் கடன் தொடர்பில், அவதானமாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அடுத்து, இன்னுமொரு தொழிலைப் பெற்றுக்கொள்ளும்வரை, உங்களிடமிருக்கும் சேமிப்பிலேயே, நீங்கள் நாள்களைக் கழிக்க வேண்டியதாக இருக்கும். அத்துடன், புதிய தொழிலொன்று கிடைக்கப் பெற்றாலும், அந்தத் தொழிலில் குறைந்தது, ஆறு மாதங்களுக்கு உங்கள் நிலை நிரந்தரமானது எனச் சொல்ல முடியாது. எனவே, இந்த நிலையில் கடன்களைப் பிற்போடச் சொல்லிக் கேட்டுவிட்டு, ஆடம்பரச் செலவுகளைச் செய்வதென்பது உசிதமான செயல் அல்ல. எனவே, உணவு, உடை, உறையுள், போக்குவரத்து போன்ற, மிக அத்தியாவசியமான செலவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குங்கள். குறிப்பாக, உங்கள் சேமிப்பையே சேமிக்கப் பழகுங்கள். இது, உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் பெரும் உதவியாக அமையும்.

அடுத்துச் சொல்கின்ற விடயம், வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்களுக்குப் புதிதானதாக இருக்காது. ஆனால், இலங்கையில் இருப்பவர்களுக்குப் புதிதான ஒன்றாகும். அதாவது, இரண்டு தொழில் அல்லது, பகுதிநேரத் தொழிலொன்றைக் கொண்டிருங்கள். இது, உங்களுடைய வருமானம், செலவுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதிலும், நிதி ரீதியாக உங்களுக்கு இருக்கக்கூடிய அழுத்தங்களையும் குறைக்கக் கூடியது. உங்கள் துறை சார்ந்ததாக, உங்களின் திறமை சார்ந்ததாக இந்தப் பகுதிநேரத் தொழிலைக் கொண்டிருப்பது, உங்களுக்கு மேலதிக சுமையாக இல்லாமலே, வருமானத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

தொழில் ரீதியான பாதுகாப்பற்றவர்கள், எத்தகைய விடயங்களைச் செய்யவேண்டியது அவசியமோ, அதுபோல சில விடயங்களைச் செய்யாமல் தவிர்ப்பதும் மிக அவசியமாகிறது. உதாரணமாக, இந்தச் சூழ்நிலையில், நிதியியல் ரீதியாக ஒருவிதமான அழுத்தம் உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய நாளாந்தச் செலவீனங்களுக்கு என்ன செய்வதென்கிற கேள்வி இருந்துகொண்டே இருக்கும். இந்த அழுத்தங்கள், உங்களைக் கடனாளியாக்கி விடக் கூடியவை. எனவே, இது தொடர்பில் அவதானமாக இருங்கள். செலவுகள் இருக்கின்றதே என்கிற அடிப்படையில், கடன்கள் வாங்க எத்தனிக்காதீர்கள். முடிந்தவரை, உங்கள் கைகளில் இருக்கக்கூடிய பணத்தில், உங்கள் செலவுகளைச் செய்ய முயற்சி செய்யுங்கள். அத்தோடு, உங்களது செலவுகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், அவற்றை வரிசைப்படுத்தி, முக்கியத்துவம் குறைந்தவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். 

அதுபோல, தொழிலொன்றில் நீங்கள் இருக்கின்ற காலத்தில், மிகச்சிறந்த சேமிப்பாளராக இருந்திருப்பீர்கள். அப்போது, நீண்டகாலச் சேமிப்புகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள். ஆனால், இந்தக் கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தி இருக்கக்கூடிய அச்சத்தின் விளைவாக, அந்த நீண்டகாலச் சேமிப்பாக இருக்கக்கூடிய நிரந்தர வைப்புகளை, மீளப்பெறுகின்ற தப்புகளைச் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், இத்தகைய தவறுகளைச் செய்யாதீர்கள். இது, உங்களுடைய ஒட்டுமொத்த எதிர்காலத்தையே, கேள்விக்குறியாக மாற்றிவிடும். முடிந்தவரை, உங்களுடைய திரவத் தன்மையான பணத்தை மட்டுமே, பயன்படுத்தப் பாருங்கள். உங்கள், நீண்டகாலச் சேமிப்புக்கான உண்மையான காரணங்களும் எதிர்காலத்தின் மிகப்பெரிய கனவுகளையும் இந்தக் குறுங்காலப் பிரச்சினைகளுக்காகத் தியாகம் செய்துவிடாதீர்கள்.

மேற்கூறிய தரப்பினரைத் தவிர்த்து, இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்களே, இந்தத் தொழில் ரீதியான வருமான பாதுகாப்பைக் கொண்டிருக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு, மாதாந்த வருமானம் கிடைக்கின்றபோதிலும், அந்த வருமானமானது, முன்னர் கிடைத்தது போல அதேயளவிலோ, அதிக சலுகைகளைக் கொண்டதாகவோ அமைந்திருக்காது. எனவே, இவர்கள்தான் இந்தக் கடன் என்கிற மாயைக்குள் சிக்கிக்கொள்ளக்கூடிய, அதிக வாய்ப்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள், என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

நீங்களும் மேலே குறிப்பிட்டதுபோன்று, உங்களுடைய செலவுகளைப் பட்டியல்படுத்திக்கொண்டு, திட்டமிடலை நோக்கிச் செல்வது அவசியமாகிறது. காரணம், தற்போதைய நிலையில், உங்களுக்கான வருமானம் பாதுகாப்பானதாக உள்ளது. ஆனால், நாளை நிச்சயமற்றது என்பதை, கொரோனா வைரஸ் தொற்றுநோய், தெள்ளத்தெளிவாகக் காட்டியிருக்கிறது. இந்தநிலையில், உங்கள் இந்த வருமானத்தை, உச்சமாகப் பயன்படுத்திக்கொள்ளுவது அவசியமாகிறது. 

இதன் முதற்படியாக, உங்கள் மாதாந்தக் கொடுப்பனவுகளில் முடிந்தவரை, எந்த நிலுவைகளையும் வைக்காமல், செலுத்திவிடப் பாருங்ககள். உதாரணமாக, நீங்கள் பயன்படுத்தும் கடனட்டைகளுக்குக் குறைந்த கட்டணத்தைச் செலுத்திவிட்டு, நேரம் வருகின்றபோது அதை அடைக்கலாம் என நினைப்பவர்களாக இருப்பீர்கள். அந்தத் தவறுகளை, இனிமேல் செய்யாதீர்கள். காரணம், இதுபோன்ற செயற்பாடுகளால், கண்ணுக்குத் தெரியாத நிறையக் கட்டணங்களை, நீங்கள் செலுத்திக்கொண்டு இருக்கவேண்டியதாக இருக்கும். எனவே, அவற்றைத் தவிர்த்து விடுங்கள். இது, காலப்போக்கில் உங்கள் வருமான இயலுமைக்கு மேலாக, நீங்கள் செய்கின்ற செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர மிகப்பெரும் அளவில் உதவி புரியும். குறிப்பாக, இந்தக் கொரோனா வைரஸ் காலத்தில், ஆடம்பரச் செலவுகளைச் செய்யும் தேவையுமில்லை; அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகளுமில்லை. எனவே, இந்தக் காலத்துக்குள் உங்கள் வாழ்க்கை முறையைச் சரியாக நெறிப்படுத்திக்கொள்ள நீங்கள் தயாராகி விட்டால், எதிர்காலத்திலும் அதைத் தொடர முடியும்.


அடுத்ததாக, ஏனைய தரப்பினருடன் ஒப்பிடுமிடத்து, உங்களிடத்தில் பணத்தின் கொடுக்கல், வாங்கல் அதிகமாக இருக்கும். காரணம், உங்களுக்கான மாதாந்த வருமானம் அதிகுறைந்த அளவிலாவது உறுதிசெய்யப்பட்டதாக உள்ளது. எனவே, முடிந்தவரை உங்களுடைய சேமிப்புகளையும் இந்தச் சமயத்தில் செலவுகளுக்குப் பயன்படுத்தி வீணடிக்காமல், அவற்றை எத்தகைய தேவைகளுக்குப் பயன்படுத்த சேமிக்க ஆரம்பித்தீர்களோ, அதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

அதுமட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கைச் செலவைக் கொண்டு நடத்த, மேலதிக கடன் பெறவோ, கடனட்டை, கடன் சலுகைகளை நோக்கியோ செல்ல நினைக்காதீர்கள். நம்மில் பலருமே, இந்தச் சந்தர்ப்பத்தில் கையில் காசை வைத்துக்கொண்டு, கடனட்டை, கடன் பெற்றுச் செலவுகளைச் செய்தாலும், எதிர்காலத்தில் அதை அடைப்பது தொடர்பில், சிந்திக்க முடியும். ஆனால், தற்போது அவசர தேவைக்குக் கையிலிருக்கும் பணத்தைப் பயன்படுத்த முடியும் என்கிற எண்ணமாகும். இது முற்றிலும் தவறான ஒன்று. நீங்கள் இதன்போது, உங்கள் எதிர்காலத்தைப் புதைப்பதற்கான குழியை, இப்போதே தோண்ட ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே, முடிந்தவரை உங்களுடைய செலவீனங்களை, கடனற்ற வகையில் கொண்டு செல்லப் பாருங்கள். இதன்மூலமாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுகைக்குப் பின்னராகக் குறைந்தது ஒரு வருடத்தையாவது உங்களால் மிகச்சிறந்த வகையில், கொண்டு நடத்தக் கூடியதாக இருக்கும்.

இந்தக் கொரோனா வைரஸானது விரும்பியோ, விரும்பாமலோ, எங்களுடைய செலவீனங்களைக் கட்டுப்படுத்தி, அத்தியாவசியம் சார்ந்த வாழ்க்கைமுறையாக  இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறது. இது, கொரோனா வைரஸின் பல்வேறு பிரதிகூலங்களுக்கு மத்தியிலான அனுகூலமென்று சொல்ல முடியும். 

கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்ததுமே, எங்களுடைய செலவுகளை விரிவுபடுத்தி, ஆடம்பரப் பக்கமாகச் செல்லுகின்ற நமக்கு, அந்தச் செலவுகள் இல்லாமலே, வாழ்க்கையை வாழ முடியுமென இந்தக் கொரோனா வைரஸ் கற்பித்துத் தந்திருக்கிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, எங்களுடைய வாழ்க்கை முறை சார்ந்த நிதியியல் சார் செயற்பாடுகளில், மாற்றத்தைக் கொண்டுவருகின்றபோது, மிகப்பெரும் நிதியியல் நெருக்கடிகளை, எதிர்காலத்தில் இந்த உலகம் சந்திக்கின்ற போதிலும், அத்தனையையும் எதிர்த்து நிற்கக் கூடியவர்களாக, நாம் வலுப்பெற்று இருப்போம்.

இந்தக் கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்துக்குப் பின்னராக, எவற்றில் நாம் முதலீடுகளைச் செய்யலாம்? அதிக வருமானத்தை, எவற்றில் பெற்றுக்கொள்ளலாம்? எந்தத் தொழிற்றுறை, அதிக வாய்ப்புகளை உடையதாக இருக்கும் என்கிற கேள்விகளும் உங்களிடத்தில் இல்லாமல் இல்லை. அவற்றுக்கான பதிலை, அடுத்தவாரம், இதே பத்தியில் பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X