2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பில் மரநடுகை திட்டத்தை முன்னெடுத்துள்ள ஒடாரா மன்றம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து கொழும்பில் மர நடுகைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஒடாரா மன்றம் முன்வந்துள்ளது. பெறுமதியும் பயனும் நிறைந்த 184 வகை மரங்களை நகரம் முழுவதும் நட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் பல இலங்கைக்கே உரித்தான பெறுமதி வாய்ந்த மரங்களாகும்.

இந்தத்திட்டம் கொழும்பு 07 கேம்பிரிட்ஜ் பிளேஸில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இதன் போது 20 பெறுமதி மிக்க மரங்கள் முதற் கட்டமாக நடப்பட்டன.

கொழும்பு தேர்ஸ்டன் வீதி, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை (டுப்ளிகேஷன் வீதி) காலி வீதி என்பவற்றிலும் அடுத்த கட்டமாக மரங்கள் நடப்படவுள்ளன. மரத்துக்கான செலவு மற்றும் அவற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் செலவுகளை ஒடாரா மன்றம் பொறுப்பேற்கும். இந்த மரங்களின் பராமரிப்புக்கு பொறுப்பாக இருக்கும் 25 கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கும் தேவையான முத்திரை பொறிக்கப்பட்ட மேல் அங்கிகளையும் ஒடாரா மன்றம் வழங்கும்.

'ஒரு காலத்தில் கொழும்பு இப்போதிருந்ததை விட பசுமையாக இருந்தது. நகரில் வசிப்பவர்களையும் வருகை தருபவர்களையும் கவரும் வகையில் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் கொண்டதாகவும் இருந்தது' என்று ஒடாரா மன்றத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஒடாரா குணவர்தன கூறினார். 'கொழும்பை மட்டும் அல்ல முழு இலங்கையையும் மீண்டும் பசுமையானதாக ஆக்கலாம் என்று நான் நம்புகின்றேன்.

எமது மரங்களையும் காடுகளையும் பாதுகாப்போம் என்ற திடமான மன உறுதியுடன் நாம் ஒவ்வொருவரும் இருப்போமானால், ஒரு சில மரங்களை எமது வீட்டுத் தோட்டத்திலோ அல்லது அயலிலோ நாட்டி அதற்கான உறுதியையும் நாம் வெளிப்படுத்துவோமானால் நாம் இலங்கைக்கும் எமது எதிர்கால தலைமுறைக்கும் சிறந்த சேவையாற்றியவர்களாக இருப்போம். மனித இனமும் மிருகங்களும் உயிர் வாழ மரங்கள் மிகவும் அவசியமானவை என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவிற் கொள்ள வேண்டும்.

எனவே மரங்களை பாதுகாப்பதும் இன்னும் பல மரங்களை நடுவதும் எமது சிறந்த நலனுக்கு உரியவை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அழகிய இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் துரித அழிவை காணுகின்ற போது வேதனையாக இருக்கின்றது. இன்னும் காலம் கடந்து செல்வதுக்கு முன் எமது பெறுமதி மிக்க சுற்றாடலை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

1900களில் இலங்கையின் 80% காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஆனால் 2010 அளவில் இந்த நிலை 20% க்கும் குறைவு என்ற நிலையை அடைந்திருந்தது. இலங்கையின் காடழிப்பு வீதம் தற்போது உலகில் மிகவும் உயர் மட்டத்தில் உள்ளது. வருடாந்தம் 1% என்ற நிலையில் காடுகளை நாம் இழந்து வருகின்றோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X