Editorial / 2020 மே 12 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொற்று பரவலுக்காக இலங்கையின் பிரதான பொருளாதார வலயமான மேல் மாகாணம் முடக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இவ்வாரம் முதல் படிப்படியாக மீளத்திறக்கப்படும் நிலையில், நாட்டை பொருளாதார மீட்சிக்குட்படுத்துவதற்கு தெளிவான மூலோபாயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார விவகார ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் வியாபார முன்னோடியான தம்மிக பெரேரா ஆகியோர் தெரிவித்தனர்.
சகோதர ஆங்கில பத்திரிகையான டெய்லி எஃவ்ரி, எஸ்சி செக்கியுரிட்டீஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ”பொருளாதாரத்திலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் COVID 19 க்கு பின்னரான தாக்கம்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெபினார் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்தக் கருத்துக்களை இவர்கள் தெரிவித்திருந்தனர்.
பொருளாதாரத்தில் வைரஸ் தாக்கம் என்பது பாரதூரமானது, இந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகியன இணைந்து இந்த சவால்கள் நிறைந்த சூழலுக்கு முகங் கொடுக்க வேண்டும். எவ்வாறாயினும், உலகளாவிய ரீதியில் பொருளாதார சூழல் படிப்படியாக மீட்சியடையும் நிலையில், அடுத்த ஆண்டளவில் பொருளாதாரம் சீராக இயங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
தம்மிக பெரேரா தெரிவிக்கையில், ”வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போது, அந்நாடுகள் அதிர்ச்சியடைந்திருந்தன. ஆனாலும், காலப்போக்கில் அவற்றுடன் வாழப்பழகிக் கொண்டன. பொருளாதார இடர் ஏற்பட்ட போதும் ஆரம்பத்தில் இதை எம்மால் அவதானிக்க முடிந்தது. காலப்போக்கில் இந்நிலை மீண்டது.”
”முதல் காலாண்டில் ஆழமான அதிர்ச்சி நிலவியது. அனைவரும் பதட்டமடைந்தனர். தற்போது மக்கள் எவ்வாறு இதற்கு முகங்கொடுக்க வேண்டும் எனும் ஒரு பக்குவ நிலைக்கு திரும்புகின்றனர். உலகம் புதிய வழமைக்கு தம்மை மாற்றிக் கொள்ளும். இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்வரும் வாரங்களில் மாதங்களில் உலகம் இதற்கு மாறிக் கொள்ளும்.” என்றார்.
குறுகிய கால பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், இலங்கைக்கு சவால்கள் காணப்படுகின்றன. நாட்டின் பெருமளவான ஊழியர் செயலணி குறைந்தளவு திறன்களைக் கொண்டுள்ளது. அத்துடன் விவசாயத் துறையில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகின்றது.
எனவே, விவசாயத்துறையின் வினைத்திறனை அதிகரிப்பது, உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் போட்டிகரத்தன்மையை மேம்படுத்துவது என்பது சவால்கள் நிறைந்ததாக அமைந்திருக்கும். இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 27 சதவீத ஊழியர் செயலணியின் ஆளுமை மட்டத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எனவே, மாறாக அரசாங்கம் அதிகளவு உற்பத்தி மற்றும் சேவைகள் துறையியல் அதிகளவு கவனம் செலுத்தி அதனூடாக மொத்த தேசிய உற்பத்திக்கு பாரியளவு பங்களிப்பை ஏற்படுத்துவது தொடர்பில் முக்கியத்துவமளித்து கவனம் செலுத்துவது சிறந்ததாக அமைந்திருக்கும் என பெரேரா ஆலோசனை வழங்கியிருந்தார்.
உள்ளக பொருளாதார கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துமா என்பது தொடர்பில் பிரதமரின் ஆலோசகர் கப்ரால் தெரிவிக்கையில், வைரஸ் தொற்று பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களால் பொருளாதாரத்தின் சில பகுதிகள் மாற்றமடையக்கூடும். எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் ஏற்றுமதித் துறைகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், பொருத்தமான சூழலின் போது அவர்களுக்கு விரிவாக்கம் செய்து கொள்வதற்கான ஊக்குவிப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
நாம் சில துறைகளுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது. புதிய வழமை சூழலை பயன்படுத்தி, மாற்றங்கள் மற்றும் வியாபாரங்களை மீளமைப்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். இவை இரண்டும் ஒன்றாக இடம்பெற வேண்டும். இந்த ஆண்டு சவால்கள் நிறைந்ததாக காணப்படும், சிறியளவிலான வளர்ச்சி என்பது கூட மிகச் சிறப்பானதாக இருக்கும். ஆனாலும், அது மிகவும் கடினமான விடயமாக அமைந்திருக்கும் என நான் கருதுகின்றேன். எம்மை பாதுகாத்து, சீரான நிலையில் எம்மை பேணினால், அடுத்த ஆண்டில் எம்மால் அனுகூலம் பெறக்கூடியதாக இருக்கும் என்பதுடன், எம்மால் சிறப்பாக இயங்கக்கூடியதாக இருக்குமெனவும் நான் கருதுகின்றேன்.” என்றார்.
பெரேரா தெரிவிக்கையில், ”நாம் எதிர்மறையான சிந்தனைகளுடன் எப்போதும் வாழக்கூடாது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் காணப்படும் வாய்ப்புகள் பற்றி நேர்த்தியாக பார்க்க வேண்டும். கல்வி முன்னொருபோதுமில்லாத வகையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த நபர்களும் தற்போது ஒன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த கால கட்டத்தில் இடம்பெற்ற நேர்த்தியான விடயங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், அவற்றை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.” என்றார்.
”இந்த ஊரடங்கு காரணமாக, அரசாங்கமும் பெருமளவு தொகையை வருமானமாக பெறத் தவறியுள்ளது. அரச சம்பளங்கள் மற்றும் வட்டிகளை கடன் மூலமாக செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கமும் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்திடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதாயின், நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். தனியார் துறைக்கு, தம்மில் தாமே தங்கியிருப்பது சிறந்தது. இந்த தொற்றுப் பரவல் மீண்டும் ஆரம்பித்து, மாவட்டங்களை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகவும் பிரச்சனைக்குரிய விடயமாக அமைந்துவிடும் என்பது பற்றி நான் அதிகளவு கரிசனை கொண்டுள்ளேன்.” என பெரேரா குறிப்பிட்டார்.
”கடன்களை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகைக்காலம் தொடர்பில் நான் திருப்தி கொள்ளவில்லை. இதை செயற்படுத்த நீண்ட காலமானது. தெளிவற்றதாக இருந்தது. வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை முறையாக சென்றடையவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் நாம் கற்றுக் கொண்டு, இவற்றை சீர் செய்ய வேண்டும். அடுத்த கட்டச் செயற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என கப்ரால் குறிப்பிட்டார்.
நாட்டில் உறுதியான அரசாங்கம் காணப்பட வேண்டும். அதன் போது தான் வங்கிகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் உறுதியான உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடியதாக இருக்கும். பொதுத் துறை, வியாபாரங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அனைவரையும் இலங்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு, உறுதியான ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் ஆணையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.” என கப்ரால் மேலும் கூறினார்.
ஒக்டோபர் மாதத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் பிணையத்துக்கு போதியளவு தொகை கையிருப்பிலுள்ளதாக கப்ரால் குறிப்பிட்டார். ”பெரும் சவால் யாதெனில், வருமானம் குறைந்துள்ளமையாகும். டொலர்களை கொள்வனவு செய்யவும், கடன்களை மீளச் செலுத்தவும், அரசாங்கத்துக்கு பணம் தேவைப்படுகின்றது.” என்றார்.
உறுதியான அரசாங்கம் ஒன்று காணப்பட்டால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதி செய்ய முடியும். முதலீட்டாளர் சமூகத்தின் உதவி எமக்குத் தேவை. எமது நம்பிக்கை மட்டங்கள் தொடர்ந்து பேணப்படுவதை நாம் உறுதி செய்வதுடன், இந்த கடன் பிணையக் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும். இலங்கை ஒரு போதும் பெற்ற கடனை மீளச் செலுத்த தவறியதில்லை என்பதுடன், உரிய காலத்தில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை இலங்கை உறுதி செய்துள்ளது.” என்றார்.
இந்த சூழலில் நிறுவனங்களுக்கு மேலும் வரிச் சுமை விதிக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் கப்ரால் மற்றும் பெரேரா ஆகியோர் உறுதியாக கருத்துக்களை தெரிவித்ததுடன், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து வியாபாரங்கள் மீட்சியடைவதற்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டனர்.
”பணம் அச்சிடுவது என்பது சவால்கள் நிறைந்த சூழலில் சில சந்தர்ப்பங்களில் தேவையாக அமைந்திருக்கும். இது வங்கிகளிடமிருந்து நபர்கள் குறுங்கால அடிப்படையில் தமது திரள்வுத் தன்மையை மேம்படுத்திக் கொள்வதற்காக கோரும் ஒரு மேலதிகப்பற்று வசதியை போன்றது. தற்போது சுமார் 300 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளன. ஆனாலும், இது 2016 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றது. இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என நான் கருதுகின்றேன். அரசாங்கத்தினால் எப்போது இது மீளச் செலுத்தப்படும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கும், மத்திய வங்கி ஆளுநருக்குமிடையே சிறந்த புரிந்துணர்வு காணப்படும் என நான் கருதுகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநராக நான் கடமையாற்றிய காலப்பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனாலும், உரிய காலத்தில் அரசாங்கத்தினால் அச்சிட்ட தொகை மீளச் செலுத்தப்பட்டிருந்தன. இதனால் பாரிய பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பிரதிபலிக்கப்படவில்லை.” என கப்ரால் மேலும் தெரிவித்தார்.
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago