2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

விலங்கு நல்வாழ்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம்

A.P.Mathan   / 2016 பெப்ரவரி 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலங்கு நல்வாழ்வு வரைபுச் சட்டமூலம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை Otara Foundation வரவேற்றுள்ளதுடன், சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கும் மேற்படி நடவடிக்கையானது சட்டமாக்கப்படுவதற்கான ஆதரவை தான் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. வரைபு அங்கீகரிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதி, பிரதமர், கிராமிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகியோருக்கு அவர்கள் சட்டமூலத்தினை ஆதரிப்பதில் வெளிப்படுத்திய அரசியல் விருப்புக்காகவும் மற்றும் விலங்கு நலவாழ்வு சட்டமூலத்தினை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்கு தமது ஒத்துழைப்பினையும் கவனிப்பினையும் நல்கிய அரச அதிகாரிகளுக்கும் நிறுவனம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சட்டமூலம் நிறைவேற்றப்படுவதிலும் விரைந்து நடைமுறைப்படுத்தப்படுவதிலும் இவர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. 

மேற்படி சட்டமூலத்தினை தயாரித்து 2006 இல் அரசாங்கத்திடம் பதிந்துரைகளை செய்திருந்த இலங்கை சட்ட ஆணைக்குழுவிற்கும் நிறுவனம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இம்மாற்றத்திற்கான முன்னெடுப்பினை ஒரு தனிநபர் சட்டமூலமாக 2010 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த கௌரவ வண. அத்துரலியே ரத்தின தேரர் உள்ளிட்ட தமது நிலைத்து ஆதரவினை வழங்கியவர்களுக்கும் நிறுவனம் தனது நன்றியறிதலை சமர்ப்பிக்கின்றது. அத்துடன் 1012 தொடக்கம் இச்சட்டமூலத்திற்கென இடைவிடாது ஆதரவு தேடிய விலங்குநல சட்ட ஆவண மனுதாரர்களுக்கும் அதேவேளை சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்காக விண்ணப்பங்களில் எப்பமிட்ட 28000 பேர்களுக்கும் Otara நிறுவனம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இதுவரை கிடைத்துள்ள வெற்றிகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கியது அங்கீகாரத்தை நோக்கிய அவர்களது அர்ப்பணிப்பும் கடப்பாட்டுணர்வுமே என்று நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. Aminal Nepal, PETA Asia, Fondation Brigitte Bardot ஆகிய சர்வதேச நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்புகள் பற்றியும் நிறுவனம் குறித்துரைக்க விரும்புகிறது.   

சட்டவாக்க வரைபு நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் வரையில் நீண்டசெயன்முறைகள் காத்திருக்கின்றன. மேற்படி சட்ட மூலத்தின் முன்னேற்றத்தில் பங்குகொண்டு எமது முயற்சிகளில் பங்காளிகளாக  செயற்பட்டு நிற்க முன்வருமாறு கருணையுணர்வு மிக்க குடிமக்களை நாம் வேண்டிநிற்கிறறோம்' என்று நிறுவனம் ஒரு அறிக்கை மூலம் கோரியுள்ளது. கடந்து செல்லவேண்டிய பல்வேறு முக்கிய கட்டங்களில் சட்டமூலம் முதலாவது கட்டத்தை வெற்றிகரமாக தாண்டியுள்ளது. அமுலாக்கம் வரையில் மேலும் நீண்ட தூரம்  செல்லவேண்டும்.

மேற்படி விலங்கு நல்வாழ்வு சட்டமூலவரைபானது 1907 ஆம் ஆண்டின் விலங்குகள் மீதான துன்புறுத்தல் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு பதிலாகவே கொண்டுவரப்பட்டது. குறித்த கட்டளைச் சட்டமானது விலங்குகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என உணரப்பட்டது. மேற்குநாடுகள் பலவும் பயன் நிறைவுள்ள விலங்குநல்வாழ்வு சட்டங்களை தயாரித்து உள்ளன. ஆசிய நாடுகளான இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகியனவும் தத்தமது சட்டங்களை காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளன. கருணைப் பாரம்பரியம் மிக்க இலங்கை விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இற்றைப்படுத்துவதில் பின்னடைவுகண்டிருக்கிறது.

2015 ஒக்டோபர் 04 ஆம் திகதியன்று ஒட்டாரா பவுன்டேஷன் விலங்கு நல்வாழ்வு சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் அவசியத்தை வலியுறுத்தி உலக விலங்குதினத்தை குறிக்குமுகமான ஒரு கையெழுத்து பிரச்சார நடவடிக்கை ஒன்றினை தொடங்கிவைத்திருந்தது. இந்தநடவடிக்கை பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றிருந்ததுடன் 28,000 பேர்களின் கையெழுத்துக்களையும் பெற்றுக்கொண்டது. 90% மான கையொப்பங்கள்  இலங்கையரிடமிருந்து பெறப்பட்ட அதேவேளை கடல் கடந்த நாடுகளிலிருந்தும் ஆதரவுகிடைக்கப்; பெற்றுள்ளது.

கையொப்பங்கள் இலங்கையின்  பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கொழும்பு, மற்றும் பதியந்தலாவ, அம்பாறை போன்ற தொலைதூர இடங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.  இன்றைய நிலை வரைக்கும் சட்டமூலத்தினை முன்நோக்கி நகரத்துவதில் பங்கேற்று மேற்படி விலங்குகள் நலவாழ்வு சட்டமூலத்தினை அமுல் செய்வதற்கு அவசியமான ஆதரவினை பெருமளவினர் தருவதற்கு ஊக்குவிப்பையும் வழங்கிய ஒவ்வொருவருக்கும் நான் நன்றிகளை தெரிவிக்கிறேன். ஆதரவு நல்கிய அரச மற்றும் தனியார் துறையினருக்கு பாராட்டுக்கள். 

மேற்படி சட்டமூலத்தின் நோக்கமானது ஒரு தேசிய விலங்குநல அதிகாரசபையை உருவாக்குவதன்  மூலம் விலங்குகளின்  பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். அத்துடன் விலங்குகள் மீதான துன்புறுத்தல்களை தடுப்பதற்கும் விலங்குகளின் நலன்களை பாதுகாப்பதற்குமான சட்டத்தினை வலுவூட்டும் வகையில் குற்றச் செயல்களை தெளிவாக வரையறை செய்தும், மீறல்களை தொடர்பில் கடுமையான தண்டனைகளை அறிமுகம் செய்தலுமாகும்.   

நடப்பிலுள்ள  சட்டம் தடுத்து வைக்கப்பட்டுள்ள வீடுகளில் வளர்க்கப்படுகின்ற விலங்குகளை பற்றியதாக மட்டுமேயுள்ளது. வன விலங்குகளுக்கான பாதுகாப்பை உள்ளடக்கியிருக்கவில்லை. புதியசட்டமூலத்தில் விலங்கு என்னும் சொற்பிரயோகம் 'மனிதர் தவிர்ந்த ஏனைய உயிரினங்கள்' என பொருள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செல்லப்பிராணிகள், பரிசோதனை விலங்குகள், விலங்குகளை இடம் மாற்றுதல், தொழிற்பாடுகள்  போன்றனவும்  புதிய சட்டமூலத்தில்  உள்வாங்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X