Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசியாவில், இலங்கையின் கல்வியறிவு சதவீதமானது, ஏனைய அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கல்வியறிவு சதவீதத்துக்கு மிக நெருக்கமான போட்டித்தன்மை வழங்கும் நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களின் கல்வியறிவு சதவீதமானது, 2018ஆம் ஆண்டின் பிரகாரம், 92ஆகவுள்ளது.
ஆனாலும், “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” எனும் பழமொழிக்கு ஏற்றாற்போல், இந்தக் கல்வியறிவு சதவீதமானது, மக்களின் நிதியியல் சார்ந்த அறிவு வீதத்தில் எவ்வித பயனையும் கொண்டிராத ஒன்றாகவே உள்ளது.
2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல் சார் அறிவு வீதமானது, 35 சதவீதமாகவேயுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாகவிருப்பது, நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியை, தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது.
உண்மையில், நமது கல்வியறிவு சதவீதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோர், நிதிசார் தேவைகளை முழுமை பெறச்செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்தக் கல்வியறிவுச் சதவீதமானது, நமது நாளாந்த நிதியியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்திச் செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கு, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு, பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுக்களை எவ்வாறு ஆய்வு செய்வது, நிதிச் செயற்பாடுகளைத் திட்டமிடுவது என்பதில், பலத்த குழப்பமும் சந்தேகங்களும் உள்ளன. படித்தவர்களின் நிலையே அப்படியாயின், சாதாரணமான பொதுமக்களின் நிலை என்னவாக உள்ளதென்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
நிதிசார் அறிவென்பது, பணம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அறிந்துகொள்வதாக வரையறுத்துக் கொள்ளமுடியும். இதனுள், எவ்வாறு பணத்தை உழைத்துக் கொள்ளுவது, முதலீடுகளை எவ்வாறு செய்வது, செலவீனங்களை கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளுவது, எவ்வாறு சேமித்து கொள்ளுவது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கும்.
எனவே, தனிநபரொருவர் நிதியியல் சார் அறிவைப் பொருத்தமான வகையில் கொண்டிருக்கும்போது, அவர், தனது நிதி நலன்களைத் தானே சமாளித்துக்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அதுசார் வரிசுமைகள் தொடர்பான அறிவையும் தனது வருமானத்துக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய திறனையும் கொண்டிருப்பவராக இருப்பார்கள்.
தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை போன்ற நாடொன்றில் மக்களுக்கும் வங்கிகளுக்குமிடையிலான இடைவெளியானது, மிகக் குறைவாகும். உதாரணமாக, இந்தியா போன்ற நாடொன்றில், பல கிராமங்களில் பொருத்தமான வங்கி வசதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது.
ஆனாலும், இலங்கை போன்ற நாடொன்றில், இத்தகைய நிலையில் மிகப்பெரிய முன்னேற்றகாரமான நிலையுள்ள போதிலும், நிதியியல்சார் அறிவில் நம்மவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளமை ஆச்சரியத்தைத் தரக்கூடிய தரவாக அமைந்துள்ளது. பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகள் வங்கிகளுடன் பின்னிப்பிணைந்திருப்பதால், நமது அடிப்படையான நிதியியல் செயற்பாடுகள் அனைத்துமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன.
எனவே, இலங்கை போன்ற நாடொன்றில், வங்கிகளுடன் மிகநெருக்கமான உறவை நாம் கொண்டிருக்கின்றபோதிலும் அவை சார்ந்த அடிப்படையான விடயங்களில் கூட, நாம் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகும்.
நிதியியல் ரீதியான படிப்பினையானது, கல்விக்கூடங்களிலிருந்து ஆரம்பிப்பதென்பது பொருத்தமானதாகாது. மாறாக, அவை ஒவ்வொரு வீட்டிலும், குடும்பங்களிலிருந்துமே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போது தான், அவை மேலும் அர்த்தமுடையதாக அமையும்.
ஆனால், அவை நடைமுறைக்கு சாத்தியமற்றே உள்ளது. இதற்கு பிரதான காரணம், இலங்கையின் பெரும்பாலான குடும்பங்க,ள் பொருத்தமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள், நிதிசார் பராமரிப்புக்களை மேற்கொள்ளவோ, அதற்கு முக்கியத்துவம் வழங்கவோ முற்படுவதில்லை.
மாறாக, அத்தகையக் குடும்பங்கள், நாளாந்த நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதையே பிரதானமானதாகக் கொண்டிருக்கின்றன. இதுதான், பெரும்பாலான நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நிலையாகவும் இருப்பதனால், நம்மவர்களின் நிதியியல் சார் அறிவு வீதத்தில் தளம்பல் காணப்படுகின்றது.
இன்றைய இலங்கையில் பெரும்பாலும் நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர்களும் நகரத்தில் வாழ்பவர்களும், நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களால், நிதிசார்ந்து வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் பெரும்பாலானவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கே, கடனட்டையின் செயற்பாடுகள், வங்கியின் குறுங்கால, நீண்டகாலக் கடன்களுக்கு எவ்வாறு வட்டி வீதம் அறிவிடப்படுகின்றது என்பவை போன்ற பல்வேறு விடயங்களில், இன்னும் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. இவை அனைத்துமே, நாம் இன்னமும் நிதியியல்சார் கல்வியறிவு சதவீதத்தில் வளர்ச்சி அடையவேண்டும் என்பதையும் இது நம்மைச் சுற்றியிருக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது.
இலங்கையின் நகரங்களை தவிர்த்து, கிராமப்புறங்களில் இந்த நிலை மிகமோசமாக உள்ளது. இதற்குப் பிரதான காரணம், கிராமங்களில் நிதியியல் சார் விடயங்கள் வீட்டின் தலைவர்களைச் சுற்றியே வியாபித்திருக்கிறது.
பெரும்பாலும் உழைக்கும் தரப்பாக ஆண்களிருப்பதுடன், அவர்கள் பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகளையும் நிதிசார் நெருக்கடிகளையும், குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவால், குடும்பங்களில் நிதியியல்சார் தகவல் பரிமாற்றம் குறைவடைகிறது.
அத்துடன், பெண்கள் இது தொடர்பான புரிதலைக் கொண்டிராதநிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, கிராமப்புறங்களில் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல்சார் செயற்பாடுகள், நேரத்துக்கு நேரம் புல்லுருவியாகத் தோன்றி, மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டுள்ளது. பணம் சார்ந்த கவர்ச்சியும் அதை மிக விரைவாக உழைத்துகொள்ள வேண்டும் எனும் உந்துதலும், அதனுடன் சேர்ந்ததாக நிதியியல் சார்பாகப் போதிய அறிவின்மையும் இந்தச் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல் செயற்பாடுகள் வெற்றி பெறவும், அதனூடாக மக்கள் தமது உழைப்பை இழக்கவும் காரணமாகி இருக்கிறது.
இத்தககைய நிலையிலிருந்து நாம் மீளவும் நமது நிதியியல் சார் கல்வியறிவு சதவீதத்தை அதிகரித்துக் கொள்ளவும், நாம் நிறைய விடயங்களை, நமது குடும்பங்களிலிருந்தும் கல்வியியல் ரீதியாகவும் மாற்ற வேண்டியது அவசியமாகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நிதியியல் சார்ந்த சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்களுக்கு சமமாக பெண்களும் வீட்டின் தலைமைப் பொறுப்பை கையாளும் நிலையுள்ளது.
எனவே, அவர்கள் நிதியியல் ரீதியான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதுடன், நிதிசார் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அத்துடன், பெரும்பாலான கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி, நாள் கூலியை நம்பியே வாழ்க்கையை கொண்டு நடாத்தும் குடும்பங்கள் இருக்கின்றன. இத்தகைய குடும்பங்களில், ஒரு நாள் வருமானம் இல்லாதுபோகும்போது, அவர்களுக்கான உணவைக் கூட, அவர்கள் குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுகின்றது.
எனவே, நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களில் கூட, இந்த நிதியியல் ஒழுக்கத்தை (Financial Discipline) கொண்டுவருகின்ற வகையில், இலங்கை அரசாங்கமும் இலங்கை வங்கியும், பல்வேறுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒருவகையில் உதவுவதாக அமைந்திருப்பதுடன், சிறுகுடும்பங்களின் பொருளாதார நலனை பாதுகாப்பதாகவும் அமையும்.
2016ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கை மக்களின் சராசரி கடனின் உச்சவரம்பு 196,000 ரூபாயெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, தனித்து வடக்கு-கிழக்கு பகுதிகளாக பார்க்கின்றபோது, இன்னும் அதிகமாகவிருக்க வாய்ப்புள்ளது. போரின் காரணமாக, பல்வேறு வகையில் நிதியியல் இழப்புகளைச் சந்தித்துள்ள நம்மவர்கள், நிதியியல் ரீதியான ஒழுக்க நிலையில் இன்னமும் பின்தங்கியவர்களாக இருக்கின்றார்கள்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, நுண்ணியல் நிதிக்கடனில் சிக்கியுள்ளவர்களின் நிலையே போதுமானது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவர, நமது இளம் சந்ததியினராவது கல்வியறிவு வீதத்துடன் நிதியியல் சார் அறிவு வீதத்தை அதிகரித்துக் கொள்ளுவது அவசியமாகிறது.
15 minute ago
27 minute ago
29 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
29 minute ago
29 minute ago