2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரணைதீவு மக்களுக்கு தரிசனம்

Gavitha   / 2017 மார்ச் 04 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

இரணைதீவு மக்கள், இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள், மீள்குடியேற்றத்துக்கும் தங்கி நின்றும் கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில், இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரணைதீவைச் சேர்ந்த 336 குடும்பங்களும் இரணைதீவுக்கு  படகுகளில் சென்று, இரணைதீவு புனித செபமாதா தேவாலயத்தில், நேற்று (03)  நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

கடற்படையினர் அனுமதி வழங்கிய நிலையில், பூநகரி பிரதேச செயலகத்தின் ஒழுங்குப்படுத்தலில், இம்மக்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

2009ஆம் ஆண்டின் பின்னர், மூன்றாவது தடவையாக இரணைதீவுக்கு மக்கள் வழிபாட்டுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.

இரணைதீவில் அனுமதித்த நேரத்தினை விட, கூடுதலான நேரம் செலவிட கடற்படையினர் அனுமதிக்கவில்லை என்று இரணைதீவுக்குச் சென்று திரும்பிய மக்கள் தெரிவிக்கின்றனர்.  

1992ஆம் ஆண்டு, இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள்,  முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள குடும்பங்கள், இரணைதீவில் மீள்குடியேறவும் கடற்றொழிலில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் அவை மறுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில், கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டம் நடாத்தி வந்த நிலையில், இரணைதீவின் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துள்ள கடற்படையினர், மக்களின் மீள்குடியேற்றத்துக்கும் தங்கி நின்று கடற்றொழில் செய்வதற்கும் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பூநகரி பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், இரணைதீவில் மீள்குடியேறவும் தங்கி நின்று கடற்றொழில் புரியவும் அனுமதிக்குமாறு,  இரணைதீவு மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள்,  இரணைதீவுக்கு நேரடியாகச் செல்வோம் எ;றுன எடுத்த முடிவு கூட நடைமுறைப்படுத்தவில்லை. செல்வாக்குள்ள

அரசியல்வாதிகள்,  இரணைதீவுக்குச் சென்றனர். மக்களை மீள்குடியேற்றுவோம் என்று அறிக்கைகளும் விட்டனர். அவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .