2025 மே 29, வியாழக்கிழமை

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், சுப்ரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலையொன்றை நிறுவும் நோக்கில் சிலை உள்ளிட்ட பொருட்களுடன் இன்று மதியம்  சிலர் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், புத்தர் சிலையுடன் புத்த துறவிகள் சிங்கள இனத்தவர்கள் சிலர் வாகனங்களில் பொருட்களைக் கொண்டுவந்து அங்கு புத்தர் சிலையை வைக்க முயல்வதாக தகவல் கிடைத்த குமுழமுனை பிரதேசஇளைஞர்கள் அங்கு சென்றபோது குறித்த வாகனமும் புத்த துறவிகளும் தண்ணிமுறிப்பு குளம் அமைந்துள்ள பகுதிக்கு ஊடாக நெடுங்கேணி செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் இரண்டு வாகனங்களை மறித்துள்ளார்கள்.  இரண்டு வாகனங்கள் சென்றுவிட்டன.

 அவர்களை தண்ணிமுறிப்பு குளக்கட்டுக்குகு அழைத்துக் கொண்டு சென்று அங்கு பொலிஸார் முன்னிலையில் கலந்துரையாடியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் க. சிவனேசன் உள்ளிட்டவர்களுடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்கள்.

ஏற்கெனவே, ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் புத்தர் சிலையொன்றை அமைப்பதற்கு அனுமதி கோரி இருந்துள்ளதாகவும் அதற்கு அனுமதி மறுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். 

அந்தவகையில், இண்டு வாகனங்களிலிருமிருந்த பௌத்த துறவிகள் இருவர், தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் 11 பேரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அவர்கள் அங்கு தங்கி நின்று ஆய்வு செய்வதற்காகவே வந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து பொலிஸாருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தொல்பொருள் ஆய்வுக்காகவே அவர்கள் சென்றுள்ளார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த நபர்களை பொலிஸார் விடுவித்துள்ளார்கள்.

குறித்த பௌத்த துறவிகள் பலதடவைகள் குருந்தூர்மலையில் புத்தர் சிலையினை வைப்பதற்கு முயற்சித்துள்ளபோது அது பலனளிக்காத நிலையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க குருந்தூர் மலையில் ஐயனார் ஆலயமமொன்றி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.  குருந்தூர் மலையில் ஏற்கெனவே புத்தர் சிலையினை வைக்கும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தவேளை குருந்தூர் மலை தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாக காணப்படுகின்றது. அங்கு கடந்த காலங்களில் சில மர்ம நபர்கள் புதையல் தோண்டி எடுக்கப்பட்டதற்கான தடயங்களும் காணப்பட்ட நிலையில் குறித்த சில காலங்களாக அங்கு இராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அங்கு இராணுவம் வெளியேறியுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குமுழமுனை குன்றின் மேல் குமரன் ஆலயத்துக்குச் சென்ற பௌத்த துறவிகள் சிலர் அங்கு பார்வையிட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். குன்றின் மேல் குமரன் ஆலயத்தை புனரமைப்பு செய்த நிர்வாகத்தினருக்கு அது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதி என்றும் ஆழப்படுத்தியோ கனரக வாகனங்கள் கொண்டோ வேலை செய்யவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதியில் அமைந்துள்ள குருந்தூர் மலை மறைமுகமாக அங்கு புத்தர் சிலையை வைப்பதற்காக ஏற்கெனவே சில புத்த துறவிகள் அந்த வீதியால் சென்று பார்வையிட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பிரதேசத்துக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதி, அதனை அண்டிய பகுதிளில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாக காணப்பட்டதுடன் குருந்தூர் மலைப் பகுதியல் மிகவும் தொன்மையான இந்து ஆலயம் ஒன்றும் உள்ளது. இதில் நீண்டகாலமாக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர்.

கடந்த யுத்த சூழலால் இங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். இந்தப் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறி வருகின்றனர். இதனைச் சூழவுள்ள பகுதிகளில் தொன்று தொட்டு தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக இடமென்பதுடன், பாடசாலை மற்றும் பழைய கட்டங்கள் என்பனவும் இருக்கின்றன. நல்லாட்சி என்று சொல்லுகின்ற இக்காலத்தில் இரகசியமான இரண்டு பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் சீமெந்து மற்றும் புத்தர் சிலை போன்றவற்றையும் கொண்டு வந்ததுடன், குறித்தபிரதேசத்தில் முகாம் அமைத்திருப்பதற்கான சகல ஏற்பாடுகளுடனும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனத் தெரிவித்து இன்றைய தினம் இவர்கள் வந்திருந்தனர். பொதுமக்கள் ஒன்று திரண்டு தண்ணிமுறிப்பிலிருந்து தண்டுவான் வீதியில் வைத்து இவர்களை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X