2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி மகா வித்தியாலய காணியையும் இராணுவம் விடுவிக்கவுள்ளது

Kogilavani   / 2017 மார்ச் 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்து வந்த கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதி, விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விடுவிக்கப்பட்ட பகுதியை செவ்வாய்க்கிழமை (28) சென்று பார்வையிட்டதாகவும், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட காணி தொடர்பில் நில அளவீடு செய்து, கிளிநொச்சி கல்வித் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அபிவிருத்திக்காக, இராணுவத்தினர் குறித்த காணியை விடுவிப்பு செய்துள்ளதாகக் குறிப்பிட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில், தற்போது தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் 2,680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.இதனை விட, கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 990இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்

இந்நிலையில், இப்பாடசாலைக்குச் சொந்தமான காணியாகக் காணப்படும் மகா வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள காணி, கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த காணியை விடுவித்துத் தருமாறு, கடந்த 2010ஆம் ஆண்டு முதல், முன்னைய அரசாங்கத்திடம் பாடசாலை நிர்வாகம், மாவட்ட சிவில் அமைப்புக்கள், கல்வியியலாளர்கள் எனப் பலரும் கோரிக்கை விடுத்து மகஜர்களையும் கையளித்த போதும், எந்தவித விமோசனமும் கிடைக்காத நிலையில் காணப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள காணியில், கடந்த 2004ஆம் ஆண்டு, யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரண்டு வகுப்பறைத் தொகுதிகளை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் இடம்பெற்ற யுத்த சூழலால் அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .