2021 மே 08, சனிக்கிழமை

தடையை மீறி வவுனியாவில் உண்ணாவிரதம்

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 
நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி, வவுனியாவில், இன்று (04) காலை 10 மணியளவில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
சுதந்திரமான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால்,  அடையாள உணவுதவிர்ப்புப் போராட்டம்
 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
அதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டதுடன், வவுனியா பொலிஸ் பிரதேசத்துக்குள் ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்த வேண்டாம் என்றும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
 
எனினும், குறித்த உத்தரவையும் மீறி, நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. 
 
இதற்கமைய, காலை10 மணிக்கு பழைய பஸ்  நிலைய பகுதியில் ஒன்றுகூடிய உறவுகள், ஆர்ப்பாட்டத்தை 
முன்னெடுத்ததுடன், அதனை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள்,  இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் என சிங்கள தேசம் குதூகலித்துக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறதெனவும் 73 வருடங்களுக்கு முன்பு இதே நாளிலே தங்கள் தமிழ்த் தலைவர்களும்  பிரித்தானியரும் இழைத்த பிழையால் தமிழினம் தொடர்ந்தும் சுதந்திரம் கிடைக்காத இனமாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் கூறினர். 
 
எனவேதான், சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை காலங்காலமாக கறுப்பு நாளாகவும் துக்கதினமாகவும் கடைப்பிடிக்கின்றோம் எனவும், போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.        
 
உரிமை பற்றியோ, சுதந்திரம் பற்றியோ தமிழ் மக்கள் சிந்திக்கும் போதெல்லாம், இனவாத அரசுகளின் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்கள், அங்கவீனர்கள், அரசியல் கைதிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், பற்றி எதுவித அக்கறையும் காட்டவில்லை எனவும் சாடினர்.
 
"எமது போராட்டங்களும் உரிமைக்காக எழுப்பப்படும் எமது குரல்களும் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு எமது குரல்வளை நசுக்கப்படுகின்றது. இவையாவற்றுக்குமான தீர்வை சர்வதேசம் வலிந்து பெற்றுத் தரும் என நாம் அக்கறையின்றி இருந்து விட முடியாது. தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்தாலே எதிரிக்கு முதல் அடி கொடுத்தது மாதிரித்தான். 
 
"குட்டக் குட்ட குனிந்தால் குட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். எமது உரிமைகளுக்காக நாம் போராடும் போதுதான் சர்வதேசத்தின் கவனம் எம் மீது திரும்பும்" என்றனர்.
 
ஆர்ப்பாட்டத்தில்,  பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், வவுனியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஏ.ஆர்.எம். லரிப், பிரதசே சபை உறுப்பினர் சந்திரபத்மன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X