2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நெற்செய்கைக்கு இனி ஆபத்தில்லை

Menaka Mookandi   / 2017 ஜனவரி 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டக் குளங்களின் கீழான காலபோக நெற்செய்கையில் வரட்சியினால் அழிவடைந்த செய்கையை விட அழிவின் விளிம்பில் இருந்த பயிர்கள், மழை காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளன என, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“வரட்சி காரணமாக, குளங்களின் கீழான நெற்செய்கை பாதிக்கப்பட்டு, மழை வீழ்ச்சி அவசியமாக இருந்தது. இரணைமடுக்குளத்தின் கீழான நெற்செய்கை முழுமையாக அழிவடையும் ஆபத்திலேயே இருந்தது. இந்நிலையில், கல்மடுக்குளம், புதுமுறிப்புக்குளம் ஆகிய குளங்களில் இருந்தும் நீர் விநியோகங்கள் நடைபெற்றன.

அக்கராயன் குளத்தின் நீரும் உருத்திரபுரம் நீவில் பகுதிக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனாலும், மழை வீழ்ச்சி இல்லாவிட்டால் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த கூடுதலான பயிர்கள் அழிவடைவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில், மழை வீழ்ச்சி ஏற்பட்டு குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த 32,000 ஏக்கர் காலபோக நெற்செய்கை காப்பாற்றப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

இதேவேளை, மழைக்கு முன்னரே கிளிநொச்சி மாவட்டத்தில் மானாவாரிப் பயிர்ச்செய்கைகள், மேட்டுப் பயிர்ச்செய்கைகள் கூடுதலாக அழிவடைந்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களின் கீழ், இவ்வருடம் 33,650 ஏக்கர் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனைவிட, சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் மானாவாரி வயல் நிலங்கள் உள்ளடங்கலாக 25 ஆயிரத்து 800 ஏக்கர் வரையான நிலப்பரப்பில், சுமார் 59 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .