2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பணி நிறுத்தவேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பொது வைத்தியசாலையில் சுத்திகரிப்பு தொழிலாளர்களாக கடமையாற்றிவர்களை திடீரென பணியிலிருந்து நீக்கியமையை கண்டித்து இன்று புதன்கிழமை (16) பொது வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களாக கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 45 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அரச கேள்வி கோரலுக்கமைய தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சுத்திகரிப்பு தொழிலை, தற்போது எல்ஆர்டீசி என்ற புதிய நிறுவனம் கையேற்றுள்ளமையால், 25 பணியாளர்களை திடீரென  எவ்வித கால அவகாசமும் கொடுக்காது பணியில் இருந்து குறித்த நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

இவ்வாறு இடைநீக்கப்பட்டவர்களில் அதிகளவானோர், விதவைப் பெண்களாகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்டு வாழ்பவர்களாகவும் உள்ள நிலையில், இவர்களை பணிநீக்கம் செய்தமையை கண்டித்து இடைநிறுத்தப்பட்ட 45 பேரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென்று தம்மை பணிநீக்கம் செய்தமையால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைய வாய்ப்புள்ளமையால் குறிப்பிட்ட காலத்துக்கு தம்மை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் இல்லையேல் தாம் பணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் புதியவர்கள் எவரையும் பணியில் அமர்த்த தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் இந்த பிரச்சினையை தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .