2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போராட்டத்தை திசை திருப்ப முயற்சி

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக  அரசு தெரிவித்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதோடு,  12 வருடங்களாக நாங்கள்  நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள போராடவில்லை என  மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (17) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அன்று முதல் இன்று வரை எமக்கு நஷ்டஈடு தேவை இல்லை என்று நாங்கள் கூறி வருகிறோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்து எங்களுக்கு நீதி தான் தேவை. அரசாங்கம் தரும் நிதி தேவை இல்லை.

“இவ்வாறான சலுகைகளை தந்து, தாய்மார்களின் போராட்டத்தையும் ஏக்கங்களையும் திசை திருப்ப அரசாங்கம்  முயற்சிக்கின்றது.

“நாட்டில் இன்று எத்தனையோ பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. ஒரு நேர உணவு உண்பதற்கு உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு, டீசல், பெற்றோல் உட்பட எரிபொருள் தட்டுப்பாடு, ஒரு இறாத்தல் பாணின் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. மக்கள் இலங்கையில் வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

“இந்த நிலையில், அரசால் எவ்வாறு எமக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முடியும்? சர்வதேச ரீதியில் மீண்டும் மீண்டும் கடன்களை பெறுவதற்காகவும் ஜெனிவாவில் நடை பெறும் மனித உரிமை சார்ந்த இலங்கை  விடயங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அரசாங்கம் கபட நாடகம் ஆடுகிறது.

“அதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம். அரசாங்கத்தின் கபடத்தனத்தை இனி மேலும் எந்தவொரு  தாய்மாரும் நம்பப் போவதில்லை.

“நீங்கள் எமக்கு  தருவதாகக் கூறிய ஒரு இலட்சம் ரூபாயை வைத்து  தற்போது ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடுகளையும் எரிபொருள் தட்டுப்பாடுகளையும் நிவர்த்தி செய்து,  இலங்கையில் மக்கள் பட்டினி இல்லாமல்  வாழ்வதற்கு உரிய வழிமுறைகளை செய்து கொடுங்கள்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .