2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் தலைமையில், நாடாளுமன்றத்தில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளநர் றெஜினோலட் குரே தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல், இன்று (27) காலை 10 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

“இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

“இதன்போது, விடுவிக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கமைய, மன்னார் சகர நுழைவாயிலில் இராணுவ வசம் காணப்பட்ட கூட்டுறவு சங்கத்துக்கான கட்டடம் காணப்பட்ட இடம், எதிர்வரும் திங்கட்கிழமை (29) கூட்டுறவு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

“மேலும், முள்ளிக்குளம் பிரதேசத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 100 ஏக்கர் காணியில் 23 ஏக்கர் காணியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

“எனினும் கடற்கடையினர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமையால், ஒரு சில மாதங்களில் குறித்த 23 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளனர்.

“இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறை கடற்படை முகாம், பேசாலையில் மீன்பிடி திணைக்களத்துக்குச் சொந்தமான இராணுவம் தற்போதுள்ள காணி விடுவிப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

“அத்துடன், காணி விடுவிப்பு தொடர்பில் மேலும் ஒரு கூட்டத்துக்கு வரும் போது, விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் தரவுகளை கடற்படையினர், இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் உரிய முறையில் வழங்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டது.

“மேலும், வன இலாக திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் தொடர்பாகவும் மாவட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது” என, அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .