2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 1,863 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில், மீள் குடியேற்றத்தின் போது 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 12,820 குடும்பங்களைச் சேர்ந்த 39,838 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில், கணவனை  இழந்த  1,863 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும்  பொருளாதார ரீதியாக தொழில் முயற்சிகள்  இன்றியும்  வாழ்ந்து வருகின்றன” என,  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட பேர் நடவடிக்கை காரணமாகவும் ஏனைய காரணங்களாலும் தமது வாழ்க்கைத் துணையை இழந்த இவர்களில் 61 பெண்களின் கணவன்மார்கள், இறுதிப் போரின் பின்னர் காணாமல் போயுள்ளனர்.

எனினும், இந்த தொகை அதிகமாக இருக்கலாம் என்றும், அச்சநிலை காரணமாக தகவல்களை வழங்காமல்  பலர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வருமானம்  தரும் வகையில் தொழில் முயற்சிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

அதிகமானோர், 40 வயதுக்கு இடைப்பட்ட  இளம் வயதினராக உள்ளதுடன் தனியார் தொழில் நிலையங்களுக்கு வேலைகளுக்காகச் செல்லும் போது, பல்வேறு  இடர்களையும், மன உளைச்சலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும்  அவல நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 6,249 பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக மத்திய அரசின் கீழ் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் புள்ளி விவரத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரச சார்பற்ற நிறுவனங்கள், ஏனைய பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ்  உறவுகள் ஆகியோர் தங்கள் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் நல்லின ஆடுகள், நல்லின மாடுகள் உட்பட சுய தொழில் முயற்சிகளை  ஏற்படுத்தித் தர வேண்டும்” என, பாதிக்கப்பட்டுள்ள பெண் தலமைத்துவக் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கேட்ட போது, “புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று, பாதிக்கப்பட்ட குடுபங்களிடமே உதவித் திட்டங்களை கையளிக்க  முடியும். கடந்த காலங்களில் எமது பிரதேச செயலகத்துடன் தொடர் கொள்ளாது, வேறு நபர்களின் சிபார்சுகளில்  நலன் விரும்பிகளின் உதவிகள் ஒரு சிலருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டதுடன்,  உரிய பயனாளிகளுக்கு கிடைக்காது மோசடி செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .